தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 47 ஆசிரியர்களுக்கு காணொலி காட்சி மூலமாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருது வழங்கினார்.

புதுடெல்லி:
மத்திய அரசால் ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தன்று தேசிய நல்லாசிரியர் விருது ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. இதேபோன்று இந்த ஆண்டும் இந்தியா முழுவதிலும் 47 ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆசிரியர் தினமான இன்று டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் காணொலி காட்சி வாயிலாக விருதுகளை வழங்கி கவுரவித்தார். இதில் விருது பெற்ற 47 ஆசிரியர்களில்,பெண்கள் 18 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் சென்னையை சேர்ந்த அசோக்நகர் மகளிர் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.சி.சரஸ்வதி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் எஸ்.திலீப் ஆகியோர் நல்லாசிரியர் விருது பெற்றனர்.




