அஞ்சல் அலுவலக தேர்வுகளை தமிழிலும் எழுதலாம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை :
தமிழ்நாடு வட்டத்திற்குட்பட்ட அஞ்சல் அலுவலக தேர்வுகள் மற்றும் ரயில், தபால் சேவை கணக்கர் தேர்வுகளுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 4 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் தேர்வர்கள் ஆங்கிலம் மட்டும் இந்தியில் மட்டுமே தேர்வுகளை எழுத முடியும் என குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழத்தில் உள்ள அரசியல் கட்சியினர் மற்றும் தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதனை தொடர்ந்து இந்திய அஞ்சல் சேவை வாரியத்தின் உறுப்பினர் டாக்டர் சந்தோஷ் குமார் கமிலா, இன்று சு.வெங்கடேசன் எம்.பி.க்கு எழுதியுள்ள பதில் கடிதத்தில், தமிழ்நாடு வட்டத்திற்குட்பட்ட அஞ்சல் அலுவலக தேர்வுகள் மற்றும் ரயில், தபால் சேவை கணக்கர் உள்ளிட்ட வேலைகளுக்கான மையப்படுத்தப்படாத துறை வாரிய தேர்வுகளை இனி தமிழ் மொழியிலும் எழுதலாம் என்று தெரிவித்துள்ளார்.
பதில் கடிதத்தை செய்தி குறிப்பாக சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ளார் :
இது தமிழர் திருநாளுக்கு கிடைத்த பரிசு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு வட்டத்திற்குட்பட்ட அஞ்சலக தேர்வுகள் வரும் பிப்ரவ்ரி மாதம் 14 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.