கொரோனா கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர் உயிரிழப்பு இந்திய மக்களிடையே ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போபால் :
தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு ஜனவரி 16ஆம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், போபாலைச் சேர்ந்த தன்னார்வலர் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு உயிரிழந்தது தெரியவந்துள்ளது. ஆனால் அவரது உயிரிழப்புக்கும், தடுப்பூசிக்கும் சம்பந்தமில்லை என மருந்து நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனா வைரசுக்கு கோவாக்சின் மருந்தைக் கண்டுபிடித்தது. இதற்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்தது. மூன்றாம்கட்ட பரிசோதனை முடியும் முன்னே ஒப்புதல் அளிக்கப்பட்டதாகக் கூறி மருத்துவ வல்லுநர்கள் கவலையை வெளிப்படுத்தினர்.
கடந்த டிசம்பர் 21ஆம் தேதி, மத்தியப் பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட தன்னார்வலர் உயிரிழந்துள்ளார். கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற 42 வயது தீபக் மராவி என்பவர் தடுப்பூசி போட்டுக்கொண்டு 10 நாட்களில் உயிரிழந்துள்ளார். அவரது மரணத்திற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அவரது இறப்பு குறித்து மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்புக்கும், பாரத் பயோடெக் நிறுவனத்துக்கும் தெரிவிக்கப்பட்டது.
போபால் காந்தி மருத்துவக் கல்லூரியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி :
அவரது உடலில் விஷம் இருப்பதாகச் சந்தேகிக்கப்படுவதால் இதயம் செயலிழந்ததே மரணத்திற்குக் காரணமாக இருக்கலாம். இதுகுறித்து போலீஸ் விசாரணை நடந்து வருகிறது. அவரது இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோன்று அவர் விஷம் குடித்து இறந்திருக்கலாம் என்றும் அவரது உள்ளுறுப்பு பரிசோதனைக்கு பிறகே சரியான காரணம் தெரியவரும் என்றும் பிரேதப் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர் அசோக் குமார் தெரிவித்துள்ளார். ஜனவரி 16ஆம் தேதி கோவாக்சின் தடுப்பூசியை இந்தியர்களுக்குச் செலுத்த ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், இவ்விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.




