மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில் நடைபெறவிருந்த நாடாளுமன்ற பேரணி ரத்துசெய்யப்படுவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளனர்.
புதுடெல்லி :
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 மாத காலமாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், மத்திய அரசின் கவனத்தை மேலும் தங்கள் பக்கம் கொண்டுவர விவசாயிகள் குடியரசு தினத்தன்று பிரமாண்ட டிராக்டர் பேரணி நடத்தினர்.
இந்த டிராக்டர் பேரணியின் போது போலீசார் மற்றும் விவசாயிகளிடையே மிக பெரிய வன்முறை வெடித்து 400 க்கும் அதிகமான போலீசார் காயமடைந்தனர். டிராக்டர் கவிழ்ந்ததில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து டெல்லி செங்கோட்டையில் புகுந்து ஒரு குடிப்பிட்ட மதத்தின் கொடியும் ஏற்றப்பட்டது.
இந்தநிலையில், பல்வேறு விவசாய சங்க தலைவர்கள் மீது 25 வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர். மேலும், வன்முறை தொடர்பாக 19 பேரையும் கைது செய்துள்ளனர். தற்போது, டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்ததால் பிப்ரவரி 1 ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கலின்போது நடைபெறவிருந்த நாடாளுமன்ற பேரணி ரத்துசெய்யப்படுவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக மகாத்மா காந்தி நினைவு நாளான 30 ம் தேதி நாடு முழுவதும் அமைதியான முறையில் பொதுக்கூட்டங்கள், உண்ணாவிரத போராட்டங்கள் நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளனர்.
டிராக்டர் பேரணி வன்முறை காரணமாக வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் இருந்து 2 விவசாய சங்கங்கள் விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.