சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் கட்டாயம் என்ற முறையை வரும் பிப்ரவரி மாதம் 15 ம் தேதி வரை ஒத்திவைப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
நாடுமுழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருப்பதை தவிர்ப்பதற்காக தானியங்கி சுங்க கட்டணம் வசூலிக்கும் திட்டம் என்ற பாஸ்டேக் அட்டை முறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.இந்த பாஸ்டேக் அட்டை முறையை பயன்படுத்த வாகனத்தின் விபரம், உரிமையாளர்களின் பெயர், முகவரி போன்றவற்றை பதிவு செய்து 22 வங்கிகளுடன் தேசிய நெடுஞ்சாலைத்துறை இணைந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.
டிசம்பர் 1 ம் தேதி 2017 ம் ஆண்டுகளுக்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட வாகனங்களுக்கு 2021 ம் ஆண்டு ஜனவரி 1 ம் தேதி முதல் பாஸ்டேக் கட்டாயம் என்றும், அதேபோல் 2017 ம் ஆண்டு டிசம்பர் 1 ம் தேதி முதல் பதிவு செய்யப்பட்ட அனைத்து புதிய நான்கு சக்கர வாகனங்களுக்கும் பாஸ்டேக் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்து இருந்தது.
மேலும், வருகிற ஜனவரி 1 ம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் பாஸ்டேக் அட்டை பொருத்துவது கட்டாயமாக்கப்படுகிறது என்று மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார். தற்போது சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறையை கட்டாயமாக்கப்படுவதை பிப்ரவரி 15 ம் தேதி ஒத்திவைக்கப்பட்டு காலநீட்டிப்பு செய்யப்படுவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.