இங்கிலாந்திற்கான விமான போக்குவரத்து தடை மேலும் ஒரு வாரம் நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
இங்கிலாந்து நாட்டில் வளர்சிதை மாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த புதிய வைரஸானது சூழ்நிலைக்கு தகுந்தார் போல வளர்சிதை மாற்றம் அடைந்தும், இதன் பரவும் தன்மை 70 சதவீதம் அதிகம் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டிபிடித்துள்ளனர்.
இந்தநிலையில் இங்கிலாந்து நாட்டிற்கு செல்லும் விமான போக்குவரத்துக்களை பல்வேறு நாடுகள் தடை விதித்து வந்தது. இந்தியாவிலும் கடந்த 23 ம் தேதி முதல் இங்கிலாந்து நாட்டிற்கான போக்குவரத்து தடை விதித்தது.
தற்போது, இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்தவர்களில் 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அதில், 20 பேருக்கு புதிய வகை உருமாறிய கொரோனா தொற்று உறுதியானது கண்டறியப்பட்டது. மற்றவர்களின் பரிசோதனை முடிவு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, இங்கிலாந்திற்கான விமான போக்குவரத்து தடை வருகின்ற ஜனவரி மாதம் 7 ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.