ஆந்திர மாநிலத்தில் டிஎஸ்பி மகளுக்கு அவரது காவல் ஆய்வாளர் தந்தை சல்யூட் அடித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆந்திரா:
ஜெசி பிரசாந்தி கடந்த 2018 ம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்வில் வெற்றி பெற்று ஆந்திர மாநிலம் குண்டூர் டவுன் பகுதியில் காவல்துறை உதவி கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை ஷாம் சுந்தர் திருப்பதி சந்திரகிரி கல்யாணி டேம் பகுதியில் உள்ள போலீஸ் பயிற்சி மையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில், கடந்த ஞாயிற்று கிழமை அன்று திருப்பதியில் காவல் துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்துகொள்ள சீருடையில் வந்திருந்த டிஎஸ்பி மகளான ஜெசி பிரசாந்திக்கும் தந்தை ஷாம் சுந்தர் சல்யூட் அடித்து கண்ணீர் மல்க மனதில் மகிழ்ச்சியுடன் வரவேற்றார். மகிழ்ச்சிகரமான இந்த நிகழ்வை புகைப்படம் எடுத்து ஆந்திர மாநில காவல் துறை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தது. தற்போது இந்த புகைப்படம் இந்திய அளவில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Read more – மதுரை அலங்காநல்லூரில் ஜனவரி 16 ம் தேதி ஜல்லிக்கட்டு : 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி
இந்த நிகழ்வு குறித்து ஜெசி பிரசாந்தி தெரிவிக்கையில், எனக்கு என் தந்தை தான் அனைத்திற்கும் உத்வேகம். எனது தந்தை மக்களுக்கு சேவை செய்வதை பார்த்து தான் வளர்ந்தேன். அது தான் என்னையும் காவல் துறையை தேர்ந்தெடுக்க ஊக்கமளித்தது. நாங்கள் இருவரும் பணியில் இருக்கும்போது சந்தித்துக் கொண்டது இதுவே முதல்முறை. எனக்கு சல்யூட் அடிக்க வேண்டாம் என்று எத்தனை முறை கூறினாலும் அவர் கேட்கவில்லை. அவர் என் தந்தை என்பதால் எனக்கு சல்யூட் அடித்த பொழுது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் நானும் அவருக்கு மீண்டும் சல்யூட் அடித்தேன் என்று தெரிவித்துள்ளார்.