பாராளுமன்ற கட்டிட வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ள நிலையில் அதற்கான பணியை தொடங்க கூடாது என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:
புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்காக வரும் டிசம்பர் 10 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்ட இருக்கிறார்.இதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில்,பாராளுமன்ற கட்டிடம் தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்பொழுது இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் புதிய பாராளுமன்ற கட்டிடம் அமைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்தனர்.அதனை தொடர்ந்து பாராளுமன்ற கட்டிடம் குறித்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது கட்டுமானங்களை எப்படி தொடங்குகிறீர்கள்? என்றும் கேள்வி எழுப்பினர்.
மேலும்,கட்டுமானங்கள் நடக்கவில்லை என்பதை சொலிசிட்டர் ஜெனரல் உறுதிப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இதை ஏற்ற மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரும், மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் சுசார் மேத்தா,புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மட்டுமே தற்போது நடக்க இருக்கிறது.அதை கட்டுவதற்கான பணிகள் தற்போது நடைபெறாது என்று உறுதியளித்தார்.இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.