ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க பணம் இல்லாததால் திருவிதாங்ககூர் தேவசம் போர்ட் கட்டுப்பாட்டில் உள்ள சபரிமலை உள்ளிட்ட, 1,252 கோயில்களின் நகைகளை அடகு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போல கேரளாவிலும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள தேசிய அளவிலான ஊரடங்கு காரணமாக, கேரளாவிலும் தொடர்ந்து மாநிலம் முழுவதும் அனைத்து கோயில்களும் மூடப்பட்டன. இதனால் கோயில்களை நிர்வாகித்து வரும் அனைத்து தேவசம்போர்டுகளும் வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றன.
கேரள மாநிலத்தின் வருமானத்தில் முக்கிக பங்கு வகிக்கும் பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலை கட்டுப்படுத்தும் திருவிதாங்கூர் தேவசம்போர்டின் நிலைமையும் தற்போது இதேதான்.
இந்த தேசவசம்போட்டின் கீழ் மொத்தம் 1,252 கோயில்கள் உள்ளன. சபரிமலை ஐயப்பன் கோயில் வருமானத்தை வைத்து தான் மற்ற கோயில்கள் அனைத்தும்
நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
இந்த தேவசம்போர்டு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்துக்காக மாதம் சுமார் 35 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. ஆனால், கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக கோயில்கள் மூடப்பட்டுள்ளதால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, சபரிமலை கோயில் வருமானத்தை ஈடுகட்ட திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு, கேரள அரசு 100 கோடி ரூபாயை கொடுப்பதாக அறிவித்து இருந்தது. ஆனால், இதுவரை ₹30 கோடி மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது.
வருமானம் இல்லாத காரணத்தால் குறிப்பிட்ட கோயில்களில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு ஊதியம் தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க, கோயில்களில் உள்ள தங்கத்தை ரிசர்வ் வங்கியில் அடகு வைத்து பணம் பெற ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வாசு, ரிசர்வ் வங்கியிடம் ஆலோசனை நடத்தி உள்ளார். இதனிடையே, திருவிதாங்கூர் தேவசம்போர்டில் 50 பியூன்கள், 140 கிளார்க் பதவிகள் திடீரென குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.