டிராக்டர் பேரணி!: தலைநகரில் யாரை அனுமதிக்கலாம்; அனுமதிக்கக்கூடாது என்று டெல்லி போலீஸ்தான் முடிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.
புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் 54வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குடியரசு தினத்தன்று பிரம்மாண்ட டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்றும் விவசாயிகள் தெரிவித்திருந்தார்கள். இந்த நிலையில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்தவுள்ள டிராக்டர் பேரணிக்கு தடை கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.
வருகின்ற 26ம் தேதி டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்றும் இதில் 1 லட்சம் டிராக்டர்கள் செல்லும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. மீண்டும் இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அச்சமயம் டிராக்டர் பேரணி நடத்துவதன் மூலம் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். அதனால் டிராக்டர் பேரணியை தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.
இதையடுத்து தலைநகரில் சட்டம் – ஒழுங்கை காக்கும் பொறுப்பு டெல்லி போலீஸ் கையில் உள்ளது. தலைநகரில் யாரை அனுமதிக்கலாம்; யாரை அனுமதிக்கக்கூடாது என்பதை டெல்லி போலீஸ்தான் முடிவு செய்ய வேண்டும். தலைநகரில் சட்டஒழுங்கை காக்கும் பொறுப்பு டெல்லி போலீசாரின் கையில் உள்ளது என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். இதில் தாங்கள் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க இயலாது என குறிப்பிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளை மறுநாள் ஒத்திவைத்தனர்.
…