நாட்டின் 10 முக்கிய உற்பத்தி துறைகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்க, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கிழக்கு லடாக் எல்லைப்பகுதியில் சீனாவுடன் நிலவும் மோதல் போக்கை தொடர்ந்து, அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், இறக்குமதியை சார்ந்து இருப்பதை தவிர்த்து, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
இந்த சூழலில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் 10 முக்கிய துறைகளுக்கு கூடுதல் சலுகைகள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தொழிற்சாலைகள் எவ்வளவு உற்பத்தி செய்கின்றனவோ அதனடிப்படையில் சலுகை வழங்கப்படும் என, கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

வாகனங்கள், ஜவுளி நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கிய உற்பத்தி நிறுவனங்களுக்கு சலுகைகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏசி, எல்இடி பல்ப் உள்ளிட்ட பொருட்கள், ஸ்டீல் ஆகியவற்றின் உற்பத்திக்கு ஊக்கம் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

சுயசார்பு இந்தியாவை உறுதிப்படுத்தும் நோக்கில் பல்வேறு முதலீட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன எனவும், மருத்துவம், மின்னணு உள்ளிட்ட துறைகளில் உற்பத்தியை அதிகரிக்க ஊக்கத்தொகை தர முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
உற்பத்தி துறைக்கு ரூ.2 லட்சம் கோடியில் ஊக்கத்தொகை அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகையாக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி செலவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.




