உத்தரப்பிரதேசத்தில் துப்பாக்கியுடன் போஸ் கொடுத்தபடி, அடிக்கவும், ஆளையே தூக்கவும் தன்னை அணுகவும் எனும் விதத்தில் சுவரொட்டிகள் மூலம் விளம்பரம் செய்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆட்சி செய்து வருகிறார். நாட்டிலேயே அதிக அளவில் பெண்களுக்கு எதிராக அதிக வன்முறைகள் மட்டுமின்றி, பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளும் அங்கு நடைபெறுவதாக பல தரப்பில் இருந்து கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த சூழலில் முசாபர் நகரில் இளைஞர் ஒருவர் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அந்த சுவரொட்டியில், இளைஞர் ஒருவர் கைத்துப்பாக்கியுடன் இருப்பதோடு, தங்களது சேவைக்கான கட்டணங்கள் என குற்றச்சம்பவங்களை செய்ய விலை நிர்ணயித்து பட்டியலிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒருவரை மிரட்டுவதற்கு ரூ.1000, அடிப்பதற்கு ரூ.5 ஆயிரம் , காயம் ஏற்படுத்துவதற்கு ரூ.10 ஆயிரம் எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

மேலும் குறிப்பிட்ட நபரைக் கொலை செய்வதற்கு ரூ.55 ஆயிரம் வரை சேவைக் கட்டணமாக பெறப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையில் இறங்கினர். இதையடுத்து அந்த இளைஞர் சரதவல் காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த சவுக்கடா கிராமத்தில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டார். விரைவில் இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.




