வாட்ஸ் அப் செயலி மூலம் பணப் பரிமாற்றம் செய்யும் வசதியை மேலும் விரிவுபடுத்த, தேசிய பணப் பட்டுவாடா கழகம் ஒப்புதல் அளித்துள்ளது.
பேஸ்புக் நிறுவனத்தின் கீழ் செயல்படும் வாட்ஸ்அப் செயலியில் பணப்பரிமாற்றம் செய்வதற்கான வசதி, கடந்த 2018ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனாலும், முறைப்படி அரசின் அனுமதி கிடைக்காத காரணத்தால் இந்த வசதி, வாட்ஸப் செயலியின் 10 லட்சம் பீட்டா பயனாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், அந்த வசதியை நாடு முழுவதும் 2 கோடி பயனாளர்களுக்கு வழங்க தேசிய பணப்பட்டுவாட கழகம் அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் 40 கோடிக்கும் அதிகமான பயனாளர்களைக் கொண்ட வாட்ஸ்அப் செயலி, ஆன்லைன் பணப் பரிமாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஆன்லைன் பணப் பரிமாற்றத்திற்கு அதிகம் பயன்படுத்தப்படும் கூகுள் பே, போன் பே போன்ற செயலிகள் பின்னடைவை சந்திக்கும் என கூறப்படுகிறது.
இதனிடையே, வாட்ஸ் ஆப் வழியாகப் பயனாளர்கள் பணம் அனுப்புவதற்குக் கட்டணம் கிடையாது என பேஸ்புக் தலைமைச் செயல் அலுவலர் மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மார்க் ஜுக்கர்பர்க் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், வாட்ஸ் ஆப் வழியாகப் பணம் அனுப்பும் வசதி 140 வங்கிகளின் உதவியுடன் செயல்படுத்தப்படுவதாகவும், இதனை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.