அரசாங்கம் தனது கைகளில் வாளை ஏந்தி இருந்தாலும் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைக் குற்றச்செயல்களை தடுக்க முடியாது என உத்தரபிரதேச மாநிலம் பல்லியா தொகுதி பாஜக எம்.எல்.ஏ சுரேந்திர சிங் சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார்.
உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. அம்மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன. பெண்கள் அமைப்புகள், பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள் இந்த சம்பவத்திற்கு எதிராக கண்டனக்குரல்கள் எழுப்பி வருகின்றன. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் பல்லியா தொகுதி பாஜக எம்.எல்.ஏ சுரேந்திர சிங் செய்தியாளர்களை சந்தித்தபோது,
அரசாங்கம் தனது கைகளில் வாளை ஏந்தி இருந்தாலும் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைக் குற்றச்செயல்களை தடுக்க முடியாது எனவும் பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு, கலாச்சாரத்தையும், சடங்குகளையும், நல்ல பண்புகளையும் கற்றுக் கொடுத்து வளர்ப்பதன் மூலமாகவே பாலியல் வன்கொடுமையை தடுக்க முடியும்.அரசும் நல்ல பண்புகளும் இணைந்தால் நாடு சிறப்பாக செயல்பட முடியும் என்று கூறியுள்ளார். மேலும், ஒரு அரசு எப்படி அதன் மக்களை காக்க வேண்டுமோ அதைப்போல பெற்றோர்களும், அவர்களின் பெண் குழந்தைகளுக்கு கலாச்சாரம், நல்ல பண்புகளுடன் சேர்த்து அடக்கமாகவும் பேசவும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியுள்ளார்.