சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜனவரி மாதம் தள்ளிவைப்பு – மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல்.
டெல்லி, சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான முதுநிலை மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மாற்றம் செய்ததை எதிர்த்து 41 மருத்துவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் 20 அன்று நடந்த வழக்கின் விசாரணையின் போது முன்பு, ஆகஸ்ட் 31-ஆம் தேதி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வின் பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டது.
அதில் நிறைய மாற்றங்களை மேற்கொண்டிருப்பதாகவும் குறிப்பாக மருத்துவ மேல்படிப்பில் “பொதுமருத்துவம்” எடுத்துப் படித்த மாணவர்கள் பயனடையும் வகையில் பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் இன்னும் தேர்வுக்கு இரண்டு மாதங்களே உள்ள நிலையில் கடைசி நேரத்தில் இப்படியான மாற்றங்கள் மேற்கொண்டது பல தரப்பினரையும் பாதிக்கக் கூடியது என வாதங்கள் முன் வைக்கப்பட்டது. வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு, தேசிய தேர்வுகள் ஆணையம் மற்றும் தேசிய மருத்துவ கமிஷன் ஆகியவை பதில் அளிக்குமாறு நோட்டீஸ் பிறப்பித்து வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர். இந்நிலையில், இன்று பிராமண பத்திரம் தாக்கல் செய்யத்துள்ள மத்திய அரசு முதுநிலை மருத்துவ மேற்படிப்பு மாணவர்களுக்கான சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜனவரி மாதம் தள்ளி வைப்பதாக தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் தகவலின் படி, ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடத்தப்படும். மேலும், சூப்பர் ஸ்பெசாலிட்டி படிப்புக்கான நீட் தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் தங்களை தயார் செய்யும் வகையில் நவம்பர் மாதம் நடைபெறவிருந்த தேர்வுகள் ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வின் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டதை திரும்பப் பெறப்படாது எனவும் மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.




