தமிழ்நாடு பெல்லோஷிப் திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஜூலை 31ம் தேதி வரை நீடித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநிலத்தில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் இளைஞர்களின் ஆற்றலை பயன்படுத்தி, அரசின் திட்டங்களை அமல்படுத்துவதற்காக, ‘தமிழ்நாடு கல்வி பெல்லோஷிப் திட்டம்’ உருவாக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தில் முதுநிலை உறுப்பினர் (senior fellow), உறுப்பினர் (fellow), என 2 பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில், முதுநிலை உறுப்பினர் பதவியிடங்களுக்கு 38 பணியிடங்களும், உறுப்பினர் பணியிடங்களுக்கு 114 பணியிடங்களும் உள்ளன. இதற்கான விண்ணப்பப்பதிவு ஜூலை 15ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று ஜூலை 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதில், முதுநிலை உறுப்பினருக்கு ₹45,000ம், உறுப்பினருக்கு ₹32,000ம் தொகுப்பூதியமாக வழங்கப்படும். மொத்த பணிக்காலம் 2 ஆண்டுகள். இதற்கான கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உள்ளிட்ட விவரங்களை https://devinfo.in/tamil-nadu-education-fellowship/ சென்று தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ள்ளது.
-பா.ஈ.பரசுராமன்.




