விரிவுரையாளர் பணிக்கு தமிழ் மொழி தகுதித்தாள் தேர்வு கட்டாயம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருந்தது. 24 மூத்த விரிவுரையாளர், 82 விரிவுரையாளர், 49 இளநிலை விரிவுரையாளர் என மொத்தம் 155 காலி பணியிடங்கள் இருப்பதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு தேர்வு கணினி வழியாக நடத்தப்படவுள்ளது. இந்த நிலையில் தமிழ் மொழி தகுதிதாள் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. விரிவுரையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் 50 மதிப்பெண்ணுக்கு கேட்கப்படும் தமிழ்மொழி தகுதித் தாள் தேர்வில் 20 (40 சதவீதம்) மதிப்பெண்கள் பெற வேண்டும். அப்படி பெற்றால் மட்டுமே ’பகுதி ஆ’ பிரிவில் பாடம் சார்ந்த 150 மதிப்பெண்களுக்கான வினாக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நடைபெறும் பொதுத்தேர்வில் பிற மாநிலத்தவர்கள் பங்குபெற்று பணிநியமனம் பெறுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் இந்த நடைமுறையை அறிமுகப்படுத்தியது. இந்த தகுதித்தாள் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அதற்கு அடுத்தப்படியாக பொதுப்பாட பிரிவு வினாக்கள் கணக்கில் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




