முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு செப்டம்பர் 2ம் தேதி முதல் செப்டம்பர் 4ம் தேதி வரை நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: முதுநிலை ஆசிரியர் பணியிடங்களில் 17 பாடங்களுக்கு ஒரு பணியிடத்திற்கு இருவர் வீதம் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு செப்டம்பர் 2ம் தேதி முதல் செப்டம்பர் 4ம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரிய வளாகத்தில் நடைபெறவுள்ளது. தேர்வர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நாள் மற்றும் நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்னர் மட்டுமே ஆசிரியர் தேர்வு வாரிய வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவர். சான்றிதழ் சரிபார்ப்புக்கு குறிப்பிட்ட தேதியில் நேரில் வருகை புரியாத விண்ணப்பதாரர்கள் அவர்கள் தகுதியான மதிப்பெண் பெற்றிருப்பினும், அடுத்தகட்ட பணித் தேர்வுக்கு பரிசீலிக்கப்படமாட்டார்கள்.“
விண்ணப்பதார்கள் ஒரு பணிடத்திற்கு 2 பேர் வீதம் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவதாலும், அவர்களின் சான்றிதழ்கள், ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டாலும் மட்டுமே இறுதித் தேர்வுக்கு உத்தரவாதம் இல்லை. ஆசிரியர் தேர்வு வாரிய வளாகத்தில் கூட்டமாக சேருவதை தவிர்த்து அமைதி காத்திட வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு வருவோர், அசல் கல்விச்சான்றிதழ்கள், முன்னுரிமைகோரும் சான்றிதழ்கள், அசல் ஆதார் அட்டை ஆகியவற்றில் ஒரு செட் சுயசான்றொப்பம் இட்ட நகல், அழைப்புக்கடிதம் & விண்ணப்ப நகல் ஆகிய்வற்றை தவறாமல் கொண்டுவர வேண்டும்.கைபேசிகள், பைகள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டுவர அனுமதி கிடையாது. வளாகத்துக்குள் பெற்றோர்கள்,சிறார்கள் & உறவினர்களை அழைத்துவரக் கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.