நடப்பு நிதியாண்டில் இந்தியாவிலேயே அதிக கடன் பெற்ற மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. ரூ.30,500 கோடியைக் கடனாக வாங்கியுள்ளது.
இந்தியாவிலேயே சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னிலையில் இருந்து வருகிறது. மத்திய அரசிடமிருந்து நிதிப் பகிர்வு குறைவான அளவிலேயே கிடைத்தாலும் மாநிலத்தில் மக்கள் நலத் திட்டங்களுக்காகவும் இதர செலவுகளுக்காகவும் சந்தையில் கடன் வாங்கி செலவழித்து வருகிறது தமிழக அரசு. மத்திய நிதிக் குழுவின் பரிந்துரைப்படி தமிழகத்திற்கு கிடைக்கும் நிதி குறைவு, சமூக நலத் திட்டங்களுக்கான செலவுகள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் தமிழகத்தின் கடன் சுமையும் அதிகரித்து வருகிறது.
தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு, புயல், வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களுக்கான நிதி ஒதுக்கீடு, ஜிஎஸ்டியில் மாநில அரசுக்குக் கிடைக்க வேண்டிய நிதி தாமதம் ஆவது போன்ற பல்வேறு காரணங்களால் தமிழக அரசின் நிதி நிலையில் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதோடு, அரசின் மானியங்கள், செலவினங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்வதால் அதிகளவில் கடன் வாங்க வேண்டிய சூழலில் தமிழகம் இருக்கிறது. இந்நிலையில், இந்த ஆண்டில் இந்திய மாநிலங்களிலேயே அதிகம் கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் முதலிடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.
மத்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து கிடைத்துள்ள தகவல்களின்படி, நடப்பு 2020-21ஆம் நிதியாண்டின் இதுவரையிலான காலத்தில் தமிழகம் மொத்தம் ரூ.30,500 கோடியைக் கடனாக வாங்கியுள்ளது. இதன் மூலம் சந்தையில் அதிகம் கடன் வாங்கிய இந்திய மாநிலங்களுக்கான பட்டியலில் தமிழகம் முதல் இடத்தில் இருக்கிறது. முன்னதாக, ஜூலை 7ஆம் தேதி 6.63 சதவீத வட்டியில் ரூ.1,250 கோடியைத் தமிழக அரசு கடனாக வாங்கியிருந்தது. இக்கடன் 35 ஆண்டு முதிர்வு காலத்தில் வாங்கப்பட்டுள்ளது.
இந்திய மாநிலங்கள் அனைத்தும் இந்த ஆண்டில் வாங்கியுள்ள மொத்தக் கடனில் தமிழகம் மட்டும் 17 சதவீதப் பங்களிப்பைக் கொண்டிருக்கிறது. தமிழகத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிரா ரூ.25,500 கோடியும், ஆந்திரப் பிரதேசம் ரூ.17,000 கோடியும், ராஜஸ்தான் ரூ.17,000 கோடியும் கடனாக வாங்கியுள்ளன. மாநிலங்களின் மொத்தக் கடன்களில் மேற்கூறிய மூன்று மாநிலங்களின் பங்களிப்பு முறையே 14%, 9%, 9% ஆக உள்ளன.
வருவாய் குறைந்து செலவுகள் அதிகரித்துள்ளதால் மேலும் அதிகமாகக் கடன் வாங்கும் நெருக்கடியில் தமிழகம் இருக்கிறது. நிதிச் செயலாளரின் கணக்கீட்டின்படி, தமிழகத்துக்கு மாதத்துக்கு ரூ.13,000 கோடி வரையில் வருவாய் இழப்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வருவாயும் தொடர்ந்து குறைந்து வருகிறது. ஜூன் மாதத்தில் தமிழகத்தின் ஜிஎஸ்டி வருவாய் 15 சதவீதம் வீழ்ச்சியடைந்திருந்தது.