சென்னை.அக்.3-
மனித நேயம் காக்கும்,” உதயம் தொண்டு நிறுவனம் சார்பாக 2022 ஆம் ஆண்டு நட்சத்திர விருது வழங்கும் விழா சென்னை தி.நகரில் நடைபெற்றது.
உளவியல் ஆலோசகரான நித்தியானந்தம் அவர்களால் தொடங்கப்பட்ட உதயம் தொண்டு நிறுவனம் மனித நேயம் காப்போம் என்ற குறிக்கோளுடன் கடந்த 10 ஆண்டுகளாக சமூகத்தில் ஏழை – எளிய, ஆதரவற்ற மற்றும் சாலையோர மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகிறது. இதுமட்டுமின்றி குழந்தைகளுக்கு கல்வி உதவி வழங்குவது, கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டியது போன்ற அளப்பறிய சேவைகளையும் உதயம் தொண்டு நிறுவனம் செய்து வருகிறது. பசியில்லா நாட்டை உருவாக்க வேண்டும் என்பதே உதயம் தொண்டு நிறுவனத்தின் பிரதான நோக்கம். இதற்காக தொண்டு நிறுவனத்தின் அங்கங்களாக உள்ள எம்.ஆர்.திலகவதி, தி.லாவண்யா என்.ஹரிப்பிரியா, எஸ்.திவ்யா ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.
இப்படிப்பட்ட தொண்டு நிறுவனம் தங்களது சேவைகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் சமூகத்தில் ஆங்காங்கே தொண்டு செய்து மிளிரும் சாதனையாளர்களை தேர்வு செய்து விருது வழங்கி அவர்களை கவுரவித்துள்ளது. சமூகத்தில் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இந்த முயற்சியை உதயம் தொண்டு நிறுவனம் மேற்கொண்டுள்ளது. சமூகத்திற்கு சேவை செய்யும் விதமாக சாதித்தவர்களை அங்கீகரித்து, அவர்களை மேலும் பல சாதனைகளை புரியும் விதமாக நட்சத்திர விருது வழங்கும் விழா சென்னை தி.நகரில் நடைபெற்றது.
விழாவில், சிறப்பு அழைப்பாளர்களாக டாக்டர் ஆர்.சிவக்குமார் ஐ.பி.எஸ், என்.தனம் ஜெயன் ஐ.ஏ.எஸ், பைரவா நிறுவனத்தின் ஜெ.கமல்தாஸ், வெளிச்சம் இதழின் ஆசிரியர் சி. பெஞ்சமின், வழக்கறிஞர் எஸ்.வி.உமாசங்கரி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று விருது பெறுவோரை கவுரவித்தனர்.
தமிழகம் முழுவதும் மருத்துவம், பத்திரிகை, சினிமா, சமூகசேவை, தொழில் என அனைத்து துறைகளிலும் சாதித்து தனித்துவமாக மிளிர்ந்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. 116 சாதனையாளர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளில் 68 பேர் பெண்கள் என்பதில் உதயம் நிறுவனம் பெருமிதம் கொள்கிறது.