ஆழ்ந்த சிந்தனையில் இருந்த நீலவேணியை “ஏய் நீலா நீலா என்ன யோசனை ? ஒன்ன கருவாடு வருத்து கார குழம்பு வெக்க சொன்னேனே வெச்சியா? இல்லையா?” என்ற தன் மகன் பக்கிரியின் அதட்டலான குரலில் சுயநினைவிற்கு திரும்பினாள் நீலவேணி.
பக்கிரி கருப்பாக இருந்தாலும் மிகவும் துடுக்காகவும், கம்பீரமாகவும், பரந்த நெற்றியும், கூர்மையான மூக்கும் புருவமத்தியில் வகிடெடுத்த தலையை சீவி இருந்தான்.
எல்லாம் செஞ்சு வெச்சிருக்கேன் தின்னுட்டு போ என்றாள் நீலவேணி கோபமாக.
பக்கிரி தானாகவே சாப்பாட்டை போட்டு சாப்பிட்டு விட்டு உடனே வெளியே கிளம்பினான்.
கொஞ்ச நாளாகவே பக்கிரியின் நண்பர்களின் சேர்க்கை சரியில்லை. அவன் அவர்களோடு சேர்ந்து கொண்டு அரசியல்வாதிகளையும், பெரும் புள்ளிகளையும் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, பல தகாத செயல்களில் ஈடுபட தொடங்கியதை நீலவேணி கவணித்துக் கொண்டுதான் இருந்தாள். அவர்களுடன் சேர்ந்து கொண்டு பணத்திற்காக, பாக் ஏரி அருகில் புதிதாக வந்துள்ள பல குடிசைகளை இடிக்க ஆரம்பித்தான் பக்கிரி.
நீ இப்படி உழைக்காம பிறரது சொல்பேச்சால் குடிசையை இடித்து பணம் சம்பாதித்தால் அது ஒட்டவே ஒட்டாது என்று நீலவேணி. பக்கிரியிடம் பலமுறை கூறியும், அவன் அதை துளி கூட காதில் போட்டுக் கொள்ளவில்லை.
நீ எப்பத்தான் திருந்தப் போறயோ? என்றவளை கடும் சொற்களாலும், கெட்ட வார்த்தைகளாலும் திட்டி நொறுக்கினான். அதன் பிறகு நீலவேணி வாயடைத்துக் கொண்டாள். உன்னிட்ட எனக்கென்ன பேச்சு என்று ஒதுங்கிவிட்டாள்.
சிறிது நேரத்திற்கெல்லாம் நீலவேணி மீண்டும் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினாள்.
அவள் மனம் பூராவும் பாக் ஏரியை பற்றிய இருந்தது. நீலவேணி சிறுவயதாக இருந்தது முதல் பாக்ஏரியில் கண்ணுக்கெட்டிய வரை கண்ணாடியாக தெளிந்த நீர் விரிந்து கிடக்கும். சின்ன சின்ன அலைகள் கரையை மோதும். தண்ணீர் எடுத்து வர ஏரிக்கு செல்லும் போதும், ஏரிக் கரையின் ஓரமாக நின்று குளிக்கும் போதும், சிறு மீன்கள் கூட்டம் கூட்டமாக “மொசு மொசு” என்று காலை மொய்ச்சி விரலிடுக்களில் கடிக்கும். அது அலாதி இன்பமாக இருந்தது.
தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத காலமது.நீலவோணி அவளது தோழிகளுடன் ஏரிக்கு போவதும், அங்கு அனைவரும் ஒன்று சேர்ந்து குளித்துவிட்டு, அவர்களது துணிகளையேல்லாம் துவைத்து கொண்டு , ஆளுக்கொரு குடம் தண்ணீர் எடுத்து கொண்டும் வீட்டுக்கு வரும் அந்த கால சிந்தனையில் மூழ்கினாள்.
நீலவேணியின் தாயார் கிருஷ்ணம்மாள் இருந்தபோது, காசு கொடுத்து ஆடு, மாடுகளுக்கு புல் வாங்கிப் போட்டதே கிடையாது. பாக்ஏரி மேட்டில் உள்ள புல்லை மேய்ந்து நிழலில் படுத்து அசை போட்டு பிறகு, ஆடு , மாடுகள் வீடு திரும்பும்.
ஏரித் தண்ணீர் தேன் போல இனிக்கும். ஊருக்கே அன்னையாக இருந்து அனைவரின் தாகத்தையும் தீர்த்து வைத்தது பாக் ஏரிதான்.
அப்படியிருக்கும் ஏரி, கோடைகாலத்தில் சுருங்கிப்போகும் போது, ஊரே திரண்டு வந்து தூர்வாரி தண்ணீரை வரவழைக்கும் ஒற்றுமை ஊராக திகழ்ந்தது.
ஆனால் இப்போதோ மணலை எடுக்கவும் அதற்காக பணம் வாங்கவும் அதையே வேலையாக செய்து கொண்டிருக்கும் பக்கிரிக்கும் அவனது நண்பர்களும் ,;ஏரி வற்ற ஆரம்பித்த போதும் தூர்வார முயற்சி எடுக்கவில்லை.
ஊர் மக்கள் தூர்வார முன்வந்தால் அவர்களையும் அடித்து விரட்டினர். அதனால் மூன்று வருடங்களாக சுத்தமாக தண்ணீர் இல்லாமல் காய்ந்து போய் கிடந்தது பாக் ஏரி..
இந்நிலையில் , நீலவோணியின் சொல்லைக் கேட்டு ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு புதிதாக வந்திருக்கும் கலெக்டரிடம் மனு கொடுத்து ஏரியை தூர்வார கேட்டுக் கொண்டனர்.
அதன் பேரில் அந்த புது கலெக்டரும் பாக் ஏரியை தூர் வாரி முன்புபோல் தண்ணீரை கொண்டு வருவதாக வாக்களித்ததோடு, ஏரி வேலையைத் தொடங்க பெரிய பெரிய கருவிகளை வரவழைத்து ஒரே வாரத்தில் அதற்கான ஏற்பாடுகளையும் செய்யத் தொடங்கினார்.
இந்த விஷயம் அறிந்த பக்கிரிக்கும் அவனது நண்பர்களும் மிகுந்த கோபமடைந்தனர்.
பக்கிரி அவனது நண்பர்களை அவர் வீட்டிற்கு அழைத்து திட்டமொன்றை தீட்டினான். இதனை கேட்டுக்கொண்டிருந்த நீலவேணி பதறிப் போனாள்.
பக்கிரி மறுநாள் அவனது நண்பர்களுடன் அவன் வீட்டில் விருந்து கொடுப்பதாக உறுதி அளித்திருந்தான். அதன்படி அன்று மாலை மீன் வருவலும், கரி சோறும் கார குழம்பு ஆக்கி வைக்கும்படி நீலவேணியிடம் கூறினான்.
காரக்குழம்பில் நல்லெண்ணெயின் மணம் ஊரை தூக்கியது. நீலவேணியின் கை மனத்தை வியந்தபடி பக்கிரியும் அவனது கூட்டாளிகளும் சாப்பாட்டை ஒரு பிடி பிடித்துவிட்டு உறங்கச் சென்றனர் .
அவர்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்த பின் மீதம் இருந்த குழம்பு முழுவதையும் ஊற்றி நீலவேணி மடமடவென அள்ளித் தின்றாள்.
பிறகு பக்கிரியும் அவனது கூட்டாளி நண்பர்களும் உறங்கியதை ஊர்ஜிதம் செய்துகொண்ட, நீலவேணி போலீஸ் ஸ்டேஷனை நோக்கி மடமடவென நடந்தாள்.
அங்கு சென்று, ” இன்ஸ்பெக்டர் ஐயா என் மவன் பக்கிரியும் அவனது கூட்டாளிகளும், பாக் ஏரியில் தண்ணீரை தூர்வார ஏற்பாடு செஞ்சிருக்கிற நம்ம புதிய கலெக்டர் ஐயாவ தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டுவதை என் காதலை கேட்டேன். மனசை பதைபதைச்சுபோய் அவங்க எல்லாருக்கும் சாப்பாட்டுல வெஷத்த வைச்சுகொடுத்துட்டேன்.”
என் மவன் செஞ்சது தப்புதான். ஆனா அவன் உயிரோட இருந்தா இந்த ஜென்மத்தில ஏரியை தூர்வார விடமாட்டான்.
ஊர்ல, ஆடு மாடு வாயில்லா ஜீவனுங்க ஊர் மக்கள் எல்லாரும் மூன்று வருசமா தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படராங்க . ஆனா அவனுக்கு அதை பத்தியெல்லாம் கவலை கெடையாது.
இப்ப நம்ம ஊருக்கு வந்திருக்கும் கலெக்டர் ஐயா, அதுக்கு ஒரு விமோசனம் கொடுக்க ஏரியை தூர்வார ஏற்பாடு செஞ்சிருக்காங்க
என் பையனோட ஒரு உயிர் போனாலும் பரவாயில்லை இந்த ஊருல உள்ள அத்தனை சீவனும் பொழைக்கணும்னு தான் அப்படி செய்தேன் என்று கூறியபடி நீலவேணி அப்படியே மயங்கி சுருண்டு விழுந்தாள்.
மறுநாள் ஏறி வேலை துவங்கியது. ஏரியில் குபுகுபுவென தண்ணீர் பாய்ந்து வந்தது. வேலை முடிந்ததும் எங்கும் பசுமை. மின்னும் பூச்சிகள், நாரைக் கூட்டம், நகரும் நத்தை, எங்கும் தவளை பறவை கூட்டம். ஊரில் எல்லோரும் தண்ணீர் எடுக்க வரும் அழகு , ஊரையே மகிழ்ச்சியில் திளைத்தது. குழந்தைகள் பெரியவர்கள் வயதானவர்கள் என அனைவரும் ஏரியில் தண்ணீர் வந்ததைக் கண்டு ஆனந்தக் கூத்தாடினார்.
மறுநாள் நீலவேணி எதிர்பார்த்த அந்த பசுமையான ஏரி நிறைய தண்ணீருடன் அந்த பசுமையான கிராமத்தை மீண்டும் உருவாக்கினாள் என்ற நிம்மதியுடன் உயிரை விட்டாள்.
*******