அன்று காலை குளித்துத் தினசரி செய்யும் பூஜையையும் முடித்து, என் கைபேசியை எடுத்துப் பார்த்தேன். அதில் ஒரு செய்தி கீழ்க்குறித்தவாறு இருந்தது.
“முன்பின் தெரியாத உங்களுக்கு நான் அனுப்பியுள்ள செய்தி வியப்பாக இருக்கும். இது ஒரு அநாதை விடுதி. ஓன்பது அனாதைப் பெண்களுடன் மற்றவர்களின் ஆதரவோடு நடத்தி வருகிறேன். இதுவரை நன்கொடை அளித்து வந்தவர்களிடமிருந்து நன்கொடை ஏதும் வரவில்லை. அடுத்த வேளைக்கு உணவு வழங்க வழி இல்லை. தயவு செய்து ஏதேனும் பண உதவி செய்ய இயலுமா?” என்று கூறி “கூகுல் பே” எண்ணும் அனுப்பியிருந்தார்.
எனக்கு மனதுக்குக் கஷ்டமாக இருந்தது. அடுத்த வேளை உணவுக்குக் கூட வழி இல்லாமல் ஒரு அநாதை விடுதியா? என்று நினைத்து வருந்தினேன். ஏதாவது பணம் அனுப்பலாம் என்று நினைத்தபோது என் நண்பன் சேகர் உள்ளே நுழைந்தான். “வாடா!” என்று அவனை அழைத்து அருகில் அமர வைத்துச். சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தேன். பிறகு அந்தக் கைபேசிச் செய்தியை அவனிடம் காட்டி “ஏதாவது பண உதவி செய்யலாம் என்று இருக்கிறேன். நீயும் ஏதாவது பணம் அனுப்பு” என்று கூறினேன்.
சேகர் சிரித்தான். பிறகு தனது கைபேசியை எடுத்து அதில் இருந்த ஒரு செய்தியைக் காட்டினான். எனக்கு வந்த அதே செய்திதான். அதே கூகுல் எண்.
“இதெல்லாம் சும்மா “பிராடு”. பலரது கைபேசி எண்களை முதலில் தெரிந்து வைத்துக் கொள்வார்கள். பிறகு இதே போல் செய்தி அனுப்புவார்கள். உன்னைப்போல் உதவி செய்ய நினைப்பவர்கள் பணம் அனுப்புவார்கள். கிடைத்தவரை அவர்களுக்கு லாபம். முதல் முறை அனுப்பியதும் மீண்டும் மீண்டும் தொல்லை தருவார்கள். எனவே இதையெல்லாம் பொருட்படுத்த வேண்டாம்” என்றான். சேகர் கூறியது எனக்குச் சரியாகப்பட்டது. எனவே பணம் அனுப்ப வேண்டாம் என முடிவு செய்தேன்.
மறுநாளும் இதே செய்தி வந்தது. அதற்கு மறுநாளும் வந்தது. நான் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. சேகர் கூறியது சரியே என்று என் மனம் கூறியது.
இரண்டு நாட்கள் சென்று நான் கடைத் தெருவுக்குக் கமலாவுடன் மளிகை சாமான்கள் வாங்கச் சென்றிருந்தேன். கமலா கடைக்குள் இருந்தாள். நான் வெளியில் நின்றிருந்தேன். அப்போது எதிரில் இருந்த கடைகளின் முன் இரண்டு பதினாறு வயதுடைய பெண்கள் நன்கொடை கேட்டுக் கடைக்காரர்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தனர்.. கடைக்காரர்கள் அவர்களை விரட்டி அடித்துக் கொண்டிருந்தனர். ஆயினும் அவர்கள் மீண்டும் மீண்டும் அவர்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தனர்.
நான் அருகில் சென்று பார்த்தேன். அப்போது ஒரு வாலிபன் அந்தப் பெண்களிடம் வந்து “இப்படி ஏன் எல்லோரிடமும் கெஞ்ச வேண்டும்? நீங்கள் மனது வைத்தால் கஷ்டமில்லாமல் வாழலாமே?” என்று கூறி ஒருமாதிரி சிரித்தான். பெண்களுக்கு அவன் என்ன கூறுகிறான் என்பது புரிந்தது. தங்களது இயலாமையை எண்ணிக் கண் கலங்கித் தலை குனிந்தனர்.
நான் அந்த வாலிபனைக் கடுமையாகப் பார்த்தேன். என் பார்வையைக் கண்டதும் அவன் தலை குனிந்து அந்த இடத்தை விட்டு அகன்றான்.
நான் தினமும் பூஜை முடித்ததும் “இறைவா! இந்த நாள் எல்லோருக்கும் பசியற்று, இனிமையாக இருக்க அருள் புரிவாய்” என வேண்டிக் கொள்வேன். இப்படி ஒரு பழக்கம் பல வருடங்களாகவே எனக்கு இருந்தது. என் மனைவி கமலா “இப்படி வேண்டிக் கொண்டால் அது பலித்து விடுமா?” என்று கூறிச் சிரிப்பாள். நான் பதில் ஏதும் சொல்வதில்லை.
இப்போது இந்தப் பெண்களைப் பார்த்ததும் நான் தின்மும் வேண்டிக்கொள்வது எனக்கு நினைவுக்கு வந்தது. மனதில் ஏதோ பாரம் தோன்றியது. நான் அந்தப் பெண்களிடம் “நீங்கள் எதற்காக இப்படி நன்கொடை வாங்க வேண்டும்? இப்படிச் செய்ய உங்கள் பெற்றோர் அனுமதிக்கிறார்களா?” என்று கேட்டேன்.
“இல்லை. நாங்கள் அனாதைகள். அப்பா அம்மா யார் என்றே தெரியாது. எங்களைப்போல் இன்னும் சிலரும் இருக்கிறார்கள். எல்லோரும் ஒரு அநாதை விடுதியில் இருக்கிறோம். கடந்த சில நாட்களாக ஒருவேளை உணவுக்குக்கூட வழியில்லாமல் இருக்கிறோம்.. யாரும் நன்கொடை கொடுப்பதில்லை. அதனால் நாங்கள் இருவரும் நன்கொடை வசூலிப்பதற்காக வெளியே வந்தோம்.. வந்த இடத்தில் எல்லோரும் திட்டி அனுப்புகிறார்கள். கேவலமாகப் பேசுகிறார்கள்” என்று கூறி அழுதாள் ஒரு பெண்.
“சரி! அழாதே!!. என்னுடன் வாங்க” என்று கூறி நான் அந்தச் பெண்களை அழைத்துக் கொண்டு கமலா இருக்கும் கடைக்குச் சென்றேன். கமலாவிடம் சுருக்கமாக விஷயத்தைக் கூறி, “நீ சாமான்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்குச் செல். நான் இவர்களுடன் சென்றுவிட்டு சீக்கிரம் வந்து விடுகிறேன்” என்று கூறிவிட்டு அந்தப் பெண்களுடன் அவர்கள் இருப்பிடத்துக்குச் சென்றேன்.
அது ஒரு பழைய வீடு. இரண்டு அறைகள் கொண்டது. அங்கே வயது வித்தியாசங்களில் இன்னும் எட்டு பெண்கள் இருந்தனர். .அங்கே இருந்த ஒரு முப்பத்தி ஐந்து வயதுடைய பெண்தான் இதை நடத்தி வருவதாகத் தெரிந்தது. அவளிடம் விசாரித்தேன்.
அவள் சொன்னாள் “என் பெயர் கலாவதி. நான் ஒரு கம்பெனியில் வரவேற்பாளராக வேலை பார்த்து வந்தேன். அதில் கிடைக்கும் வருமானத்தில் இந்த அநாதை விடுதியைக் கடந்த நான்கு வருஷமா நடத்தி வரேன். எப்படியாவது ஒரு வேளை சாப்பாட்டுக்கு வழி கிடைக்கும். கொரானா வந்ததால் எல்லோருக்கும் பணக் கஷ்டம். யாரும் நன்கொடை கொடுக்க முடியாது என்று சொல்றாங்க. எனக்கும் கடந்த ஒரு மாசமா வேலை இல்லை. எப்படியாவது ஒரு வேளை சாப்பாடு கிடைச்சால்கூட போதும்” என்றாள்.
மேலும். “நானும் பலபேருக்கு மொபைல் மூலம் செய்தி அனுப்பறேன். யாராவது இரக்கப்பட்டுப் பணம் அனுப்ப மாட்டாங்களா என்று?. யாரும் அனுப்ப மாட்டேங்கறாங்க. இந்த வீடு என் சொந்த வீடு என்பதால் வாடகை இல்லாமல் எல்லோரும் தங்கி இருக்கோம். இல்லேன்னா ரோட்டிலேதான் நிக்கனும். அரசாங்க உதவியும் கிடைக்க மாட்டேங்குது. என்ன செய்யறதுன்னும் தெரியல்லே” என்றாள். அங்குள்ளவர்களின் முகங்களைப் பார்த்தேன். எல்லோர் முகங்களும் வாடி இருந்தன. பார்த்தாலே தெரிந்தது சாப்பிட்டுப் பல நாட்கள் ஆகி இருக்கும் என்று.
உங்களுக்கு “கூகுல் பே” இருக்கா? கலாவதியிடம் கேட்டேன்.
கொடுத்தாள். பார்த்தேன். ஏற்கெனவே எனக்கு வந்த அதே எண். நான் திகைத்துப் போனேன். உலகத்தில் இருப்பவர்கள் எல்லோரையும் “பிராட்” என்று நினைத்தது என் குற்றம். ஏன் உண்மையாக இருக்கக்கூடாது? என்று ஒரு நிமிஷம் நினைக்க எனக்குத் தோன்றவில்லையே? எனக்குள் ஒரு குற்ற உணர்வு தோன்றியது. செய்தி வந்த அன்றே நான் உதவி இருந்தால் ஒரு வேளைப் பட்டினியைத் தவிர்த்து இருக்கலாமே? மனதுக்குள் நான் சங்கடப்பட்டேன்..
கைபேசியை எடுத்து “கூகுல் பே” மூலம் அந்த இடத்திலேயே ஐந்தாயிரம் ரூபாய் அனுப்பினேன். இனி தேவைப்படும்போது என்னைத் தொடர்பு கொள்ளச் சொன்னேன். கையில் பணம் கொடுத்து உடனடியாகச் சாப்பாடு வாங்கி வரச் சொன்னேன். அவர்களுடன் நானும் சாப்பிட்டேன்.
அவர்கள் திகைத்துப் போனார்கள். இப்படி ஒரு உதவியா? இறைவனே நேரில் வந்து உதவியதைப் போல் உணர்ந்தார்கள் கண்ணீரால் நன்றி சொன்னார்கள்.
நான் வெட்கிப்போனேன். முதலில் அவர்களிடமிருந்து வந்த செய்தி “பிராட்” என்று நான் எண்ணியது தெரிந்தால் இவர்கள் என்ன நினைப்பார்கள்?
பிறகு அங்கு இருந்த பெண்களைப் பற்றி விசாரித்தேன். கலாவதியையும் சேர்த்துப் பத்துப் பெண்கள். கடையில் நன்கொடை கேட்டு வந்த இரு பெண்களும் பள்ளியில் படிப்பவர்கள். மற்ற ஏழு பெண்களும் “பிளஸ் டூ” படித்து வேலை தேடிக்கொண்டிருப்பவர்கள்.
நான் கலாவதியிடம் “ நீங்கள் கவலைப்பட வேண்டாம். எனக்குத் தெரிந்த அரசு அதிகாரிகள் இருக்கின்றனர். அவர்களிடம் பேசி உங்களுக்கு நிரந்தர வருமானம் வர ஏற்பாடு செய்கிறேன்!” என்று கூறி விட்டு வீடு திரும்பினேன்.
வீட்டுக்கு வந்ததும் கமலா “என்னங்க! என்னாச்சு போன காரியம்?” என்றாள்.
நான் நடந்ததைக் கூறினேன் .கமலா உடனே என்னிடம் “எப்படியாவது இவங்களுக்கு நிரந்தர வருமானம் கிடைக்க ஏற்பாடு செய்யுங்க. அப்போதான் இவங்க பிரச்சினை தீரும்” என்றாள். நான் நினைத்தது போலவே கமலாவும் நினைத்தது கண்டு சந்தோஷப்பட்டேன்.
மறுநாள் சேகர் என் வீட்டுக்கு வந்தான். அவனிடம் நான் நடந்ததைக் கூறினேன். எல்லாவற்றையும் கேட்டு அவன் மிகவும் வருத்தப்பட்டான். “பல இடங்களில் இதுபோல் போன் மூலம் தவறான செய்திகளைப் போட்டு மோசடி செய்கிறார்கள். எனவே இது போல உண்மையான செய்திகளையும் நாம் மோசடி என்றே நினைக்க வேண்டியிருக்கிறது” என்றான். அவன் குரலில் வருத்தம் தெரிந்தது.
உடனே கூகுல் மூலம் கலாவதிக்கு ஐயாயிரம் பணம் அனுப்பினான். பிறகு “ எனக்குத் தெரிந்தவர்கள் மூலம் இன்னும் உதவி செய்யச் சொல்கிறேன். நீ கவலைப்படாதே!” என்று கூறினான்.
இதற்கு மேலும் அவன் செய்தது என்னை ஆச்சரியப்படுத்தியது. கலாவதியை அவன் அலுவலகத்தில் நல்ல ஊதியத்தில் வேலைக்கு அமர்த்தினான்.
இத்தனையும் செய்துவிட்டு அவன் கூறினான் “நீ அவர்களுக்கு உதவி செய்ய முனைந்தபோது நான் தடுத்தேன் அல்லவா? அதற்குப் பிராயச்சித்தம் செய்கிறேன்” என்று கூறிச் சிரித்தான்.
நான் அரசாங்கத்தில் உயர்பதவியில் இருந்ததால் படிக்கக்கூடிய பெண்களை அரசு பள்ளீயில் சேர்த்துப் படிக்க ஏற்பாடு செய்தேன். படிப்பு முடித்து வேலையில்லாதிருந்த மற்ற பெண்களுக்கு பிரபல துணிக்கடையில் வேலை வாங்கிக் கொடுத்தேன். இதனால் இனி இவர்கள் பட்டினி கிடைக்க வேண்டியதில்லை. மற்றவர்களின் ஏளனப் பேச்சும் கேட்க வேண்டியதில்லை.
இதுபற்றிக் கமலாவிடம் கூறியபோது அவள் ஏதும் கூறவில்லை. சிறிது நேரம் பேசாமல் திரும்பி நின்றாள். என்னைப் பார்த்துத் திரும்பியபோது அவள் இரு கண்களிலும் கண்ணீர் முத்துக்கள் ததும்பி நின்றன. அருகில் வந்து கட்டி அணைத்தாள்.
என் செயலுக்குப் அங்கீகாரம் கிடைத்து விட்டது. மனம் லேசாகி மேலே பறக்கத் தொடங்கியது.
*******************