சரஸ்வதி, மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாள். மருத்துவர்கள் இனி எத்தனை நாட்கள் உயிரோடு இருப்பார் என சொல்ல முடியாது, இங்கு வைத்துக்கொண்டு ஒரு பிரயோஜனமும் இல்லை. வீட்டுக்கு கூட்டிப் போங்கள் என கூறினார். சரஸ்வதியின் கணவர் முருகேசன் என் மகனும்,மகளும் வெளிநாட்டில் இருக்கின்றனர் அவர்களுக்கு அம்மா சீரியஸாக இருப்பதாக நேற்று தகவல் சொல்லி விட்டேன், அவர்கள் நாளை வந்து விடுவார்கள் அதுவரை அவள் மருத்துவமனையிலேயே இருக்கட்டும் என்றார்.
முருகேசன், சரஸ்வதி தம்பதியருக்கு ரமேஷ், கோகிலா என இரு குழந்தைகள் இருந்தனர். முருகேசன் ஒரு தனியார் அலுவலகத்தில் வேலை பார்த்தார். படிப்பு ரொம்ப கிடையாது. சரஸ்வதி முருகேசனின் சொற்ப சம்பளத்தில் குடும்பத்தை ஓட்டி வந்தாள். சரஸ்வதி சமையல் நன்றாக செய்வாள். தேவைப்படுவோருக்கு தன் வீட்டிலேயே சமைத்து, அதுதவிர பொடி வகைகள், வத்தல், வடகம், ஊறுகாய், அப்பளம் என வீட்டிலேயே செய்வாள். சரஸ்வதியால் ஒரே ஆளாக சமாளிக்க முடியாததால் முருகேசனும் தன் வேலையை விட்டுவிட்டு சரஸ்வதிக்கு உதவியாக இருந்தார். ஆர்டர்கள் குவிய ஆரம்பித்தன. ஒரு இடத்தை வாடகைக்கு பிடித்து ஆட்கள் வைத்து கம்பெனியாக நடத்தினர். நாளடைவில் அதில் வந்த வருமானத்தில் ஒரு இடத்தை விலைக்கு வாங்கி அதில் இயந்திரங்கள் வைத்து வியாபாரத்தை விரிவு படுத்தினர். இப்பொழுது இவர்களுக்கு கீழ் 200 ஆட்கள் வேலை செய்கின்றனர்.
குடும்ப கஷ்டத்தை சரஸ்வதி ஒருநாளும் ரமேஷ், கோகிலாவிடம் காட்டியதில்லை. அவர்கள் இருவரையும் நன்கு படிக்க வைத்தார். அவர்களும் நன்கு படித்து இருவரும் இப்பொழுது இன்ஜினியர்கள் ஆக இருக்கின்றனர். கோகிலாவிற்கு மாப்பிள்ளை பார்த்தனர். உள்ளூரிலேயே வேலை பார்க்கும் வேலவனுக்கு கட்டிக் கொடுத்தனர். பின் வெளிநாட்டிற்கு சென்று விட்டனர்.
கோகிலாவிற்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். அதற்கு வாணி, ராணி என பெயரிட்டனர். ரமேஷ் இன்ஜினியரிங் முடித்துவிட்டு எம்எஸ் படிக்க வெளிநாடு சென்றவன், அங்கேயே தன்னுடன் படித்த ஷீலா என்ற பெண்ணை விரும்புவதாக கூறினான். முருகேசனும், சரஸ்வதியும் மறுப்பு ஒன்றும் சொல்லாமல் இந்தியாவில் அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தனர். ரமேஷுக்கு பையன் பிறந்தான். அவனுக்கு சிவா என பெயரிட்டனர்.
சிறுவயதில் ரமேஷும், கோகிலாவும் எப்பொழுதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். சரஸ்வதி ரமேஷை திட்டுவாள். அண்ணன்தான் தங்கச்சியை அனுசரித்து போக வேண்டும் என்பார். உடனே ரமேஷ் என் நண்பன் ஹரி வீட்டில், ஹரி அவன் தங்கையுடன் சண்டை போட்டால் அவன் அம்மா ஹரிக்குத் தான் சப்போர்ட் பண்ணுவார், ஆனால் நீ மட்டும் எப்பொழுதும் தங்கைக்கு தான் சப்போர்ட் செய்கிறாய் என்பான். அதற்கு சரஸ்வதி, கோகிலா திருமணமாகி வேற வீட்டிற்கு போய் விடுவாள் ஆதலால் அவள் இங்கு இருக்கும் வரை நீ விட்டுக் கொடுத்தால் என்ன தப்பு என்பாள்.
கோகிலா இந்தியா வரும் போதெல்லாம் தன் குழந்தைகளுக்கு அம்மாவை சமையல் கற்றுக் கொடுக்க சொல்வாள். இந்திய கலாச்சாரத்தை சொல்லிக் கொடுக்க சொல்வாள். சரஸ்வதி பாரம்பரிய உடைகளையும், நகைகளையும் தன் பேத்திகளுக்கு அணிவித்து அழகு பார்ப்பாள். ரமேஷும் வருடத்திற்கு ஒருமுறை தன் மனைவி, குழந்தையை கூட்டிக்கொண்டு இந்தியா வருவான். முருகேசனும், சரஸ்வதியும் தன் கடையை நண்பர் கணேசனை பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு ஒரு வாரம் குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவார்கள். குழந்தைகளும் தாத்தா பாட்டி என பிரியமாக இருக்கும்.
இரு ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் சரஸ்வதி வயிறு வலிப்பதாக கூறினார். முருகேசன், வா, மருத்துவரிடம் செல்லலாம் என்றார். அதற்கு அவள் சூட்டு வலியாக இருக்கும் என்று சொல்லி, கை வைத்தியம் செய்து கொண்டாள், சரியாகிவிட்டது. ஒரு மாதம் கழித்து மீண்டும் வயிற்று வலி வந்தது. இந்த முறை அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. உடனே முருகேசன் பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மருத்துவர் சாப்பாடு வேளா வேளைக்கு சாப்பிடுகிறீர்களா என்று கேட்டார். அதற்கு முருகேசன் சரஸ்வதி எப்பொழுதாவது தான் சாப்பிடுவாள், அவளுக்கு சாப்பாட்டை விட வேலை தான் முக்கியம், யார் சொன்னாலும் கேட்க மாட்டாள் என்றார். மருந்து, மாத்திரைகள் எழுதிக் கொடுத்தார். மூன்று வேளையும் தவறாமல் சாப்பிட்டு விட்டு மாத்திரை போடச் சொன்னார். ஆறு மாதம் பிரச்சினை இல்லாமல் சென்றது. அதன் பின் மறுபடியும் வலியால் துடித்தாள்.
ஒருநாள் கோகிலா போன் செய்தபோது, முருகேசன் மட்டும் பேசினார். அம்மா எங்கே அப்பா என்றாள்.அவளுக்கு வயிற்று வலி, மாத்திரை சாப்பிட்டும் குணமாகவில்லை என்றார். பெரிய மருத்துவமனைக்கு அம்மாவை கூட்டி போய் முழு உடல் பரிசோதனை செய்யுங்கள் என்றாள். சரஸ்வதியை முழு உடல் பரிசோதனைக்கு சம்மதிக்க வைப்பதற்குள் முருகேசனுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது. பரிசோதனை முடிவில் சரஸ்வதிக்கு கல்லீரலில் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. அப்பொழுதே புற்றுநோய் கடைசி நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் கூறினர். ரேடியேஷன், கீமோதெரபி எடுத்ததில் சரஸ்வதிக்கு முடி கொட்டி இளைத்து விட்டாள். முருகேசன் மிகவும் உடைந்து விட்டார். சரஸ்வதிக்கு புற்றுநோய் இருப்பது கேள்விப்பட்டவுடன் ரமேஷும், கோகிலாவும் பதறி அடித்துக் கொண்டு வந்தனர். அம்மாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ரமேஷ் ஒரு மாதம் இருந்து விட்டு வேலை இருந்ததால் கிளம்பிவிட்டான். கோகிலா மூன்று மாதங்கள் அம்மாவுடன் தங்கியிருந்து அப்பாவையும், அம்மாவையும் நன்றாக பார்த்துக் கொண்டாள். வீட்டு வேலைகள் செய்வதற்கு நல்ல பெண்ணாக தேடி வைத்தாள். அந்தப் பெண்ணிடம் அம்மாவிற்கு கொடுக்கும் உணவு முறைகள் மற்றும் அம்மாவிடம் எப்பொழுதும் பாசிட்டிவாக பேசி நெகட்டிவ் எண்ணமே மனதில் எழவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று கூறினாள்.
நான் ஊருக்கு சென்றதும் தினமும் போன் செய்கிறேன், அம்மாவின் நிலையை என்னிடம் கூறு, நான் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறேன், அப்பாவிற்கும் வேளா வேளைக்கு உணவு கொடுத்து பத்திரமாக பார்த்துக் கொள் என்றாள். கோகிலாவின் பள்ளித் தோழி பிரியா, சரஸ்வதி வீட்டிற்கு இரண்டு தெரு தள்ளி தான் இருந்தாள். கோகிலா அவளிடம் உனக்கு நேரம் கிடைக்கும் போது சென்று அம்மாவை பார்த்துக் கொள் என்றாள். அவளும் நேரம் கிடைக்கும் போது சரஸ்வதியை பார்த்து வந்து அகிலாவிற்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்புவாள்.
அப்பாவிடம் இருந்து கால் வந்த போது அகிலாவிற்கு ஒன்றும் ஓடவில்லை என்னப்பா அம்மா அவ்வப்பொழுது மருத்துவமனையில் அட்மிட் ஆகி டிஸ்சார்ஜ் ஆகி வருவாரே அப்படித்தான் என நினைத்தேன், நீங்கள் சீரியஸாக இருப்பதாக கூறுகிறீர்களே என்றாள். நானும் அப்படித்தான் நினைத்தேன், எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. உன் தோழி பிரியாவும், அவள் கணவரும் என் கூடவே தான் எனக்கு ஒத்தாசையாக இருக்கிறார்கள் என்று கூறி அழுதார். அப்பா அம்மாவிற்கு ஒன்றும் ஆகாது நான் உடனே கிளம்பி வருகிறேன் என்றாள். குழந்தைகளுக்கு படிப்பு இருப்பதால் தன் கணவரை பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு கிளம்பினாள். விமானத்தில் அமர்ந்து தன் பழைய காலங்களை நினைத்துப் பார்த்தாள். அம்மாவிற்கும், அப்பாவிற்கும் சண்டை வந்து பார்த்தது இல்லை, அவ்வளவு அந்நியோன்யமான தம்பதிகள். இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போவது தான் அதற்கு காரணம். குழந்தைகளாகிய எங்கள் மீதும் என்றும் கோபப்பட்டதில்லை. அம்மா ரமேஷ் யாவது எப்பொழுதாவது திட்டுவார்கள், என்னை திட்டியது இல்லை. சித்திரை மாதத்தில் மல்லி சீசன் என்பதால் விலை மலிவாக இருக்கும் மல்லியும் கனகாம்பரமும் வாங்கி தலையில் பூ வைத்து அழகு பார்ப்பார். ஒவ்வொரு ஆண்டும் என் வளர்த்தி எப்படி இருக்கிறது என்று போட்டோ எடுத்து வைத்து இருக்கிறாள். எந்த வீட்டில் விசேஷத்திற்கு கூப்பிட்டாலும் தவறாமல் என்னையும் அழைத்துச் செல்வார். சடங்கு, சம்பிரதாயங்களை அழகாக விளக்குவாள்.
வீட்டு வேலை, கம்பெனி வேலை என்று ஓயாமல் உழைப்பதால், ஒருநாள் கூட உடம்பு முடியவில்லை என்று படுத்தது கிடையாது. எல்லாவற்றிற்கும் சேர்த்து வைத்து புற்றுநோய் என்ற அரக்கன் அம்மாவை ஆட்கொண்டு விட்டான். எனக்கு, ரமேஷ் இருவருக்கும் சாப்பாடு ஊட்டி விட்டு தூங்க வைத்து விடுவாள். அம்மாவும், அப்பாவும் சாப்பிட்டார்களா என ஒரு நாளும் நானும், ரமேஷும் கேட்டதில்லை. எனக்கும் அது தோன்றவும் இல்லை. பன்னிரண்டாம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவியாக வந்ததற்கு பரிசும், சான்றிதழும் கொடுத்து பாராட்டினர். அப்பொழுது அம்மாவும், அப்பாவும் கூட வந்தனர். எனக்கு பரிசு கொடுக்கும் போது போட்டோ எடுத்தனர். கோகிலா உடன் எங்களையும் சேர்த்து போட்டோ எடுங்கள் என்று அம்மா கூறினார். உடனே அம்மா, அப்பா, நான் மூன்று பேரையும் சேர்த்து போட்டோ எடுத்தார்கள். அந்த போட்டோ இன்றும் எங்கள் வீட்டு கூடத்தில் நடுநாயகமாக அலங்கரித்து கொண்டிருக்கிறது. அம்மா கம்பெனி ஆரம்பிக்கும் பொழுது என் கையில் மெழுகுவர்த்தி கொடுத்து என்னைத் தான் விளக்கேற்ற சொன்னார்கள். திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்க்கும் போதும் உனக்கு பையனை பிடிக்காவிட்டால் சொல்லி விடு, வேறு பையன் பார்த்துக் கொள்ளலாம் என்றார். எல்லாம் கோகிலாவின் கண்முன் நிழலாடின.
அம்மாவை நாம் தான் சரியாக கவனிக்காமல் விட்டு விட்டோமோ, புற்றுநோய் வந்தவுடன் நானும் உடன் இருந்திருக்க வேண்டும் தப்பு பண்ணி விட்டேன் என்று நினைக்கும் போது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடி சென்று உப்பு கரித்த பின் தான் கோகிலா நிகழ் காலத்துக்கு வந்தாள். விமான நிலையத்தில் செக்கிங் எல்லாம் முடித்து விட்டு, காரில் நேராக மருத்துவமனைக்கு சென்றாள். அம்மா இருக்கும் நிலையைப் பார்த்து கண்ணீர் விட்டு கதறினாள். மருத்துவர்கள், சரஸ்வதியின் தற்போதைய நிலையை விளக்கிச் சொல்லி இனி எங்களால் ஒன்றும் செய்ய முடியாது, எங்களால் முடிந்த எல்லா முயற்சிகளையும் எடுத்து விட்டோம், வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள் என்றார்.
சரஸ்வதி கோகிலாவின் கையைப் பற்றி தன் அருகே இழுத்தாள். கோகிலா என்னம்மா என்றாள். இப்பொழுது நான் ஒரு உண்மையை சொல்லப் போகிறேன் என்றாள். கோகிலாவுக்கு ஒன்றும் புரியவில்லை. சரஸ்வதி தொடர்ந்தாள், ரமேஷ் தான் என் பையன், நீ, நான் பெற்ற பெண் இல்லை என்றாள். இதை இப்பொழுது ஏன் சொல்கிறேன் என்றால் பின்னாடி யார் மூலமாவது உனக்கு இந்த உண்மை தெரிய வந்தால் நீ என்னை வெறுப்பாய் அல்லவா, அதனால் உண்மையை சொல்லி விட்டேன் என்றாள். கோகிலாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது. என்னம்மா சொல்கிறீர்கள் என் அப்பா அம்மா யார் என்றாள். ரமேஷ் பிறந்து ஐந்து வயது வரை குடும்பம் மிகவும் ஏழ்மையில் இருந்தது. ஒருவேளை கஞ்சி குடிப்பதே கஷ்டமாக இருக்கும். ஒரு நாள் வேலை தேடி நான் போய்க்கொண்டிருந்த போது ரோட்டின் ஓரமாக நீ இருந்தாய். உன் அழுகுரல் கேட்டு பக்கத்தில் சென்று பார்த்தேன். உன்னை மற்றவர்களிடம் கொடுக்க விருப்பமில்லாமல் நான் வீட்டிற்கு எடுத்து வந்து விட்டேன். உன் அப்பா நாமே கஷ்டப்படுகிறோம் இதில் இந்த குழந்தையை எப்படி வளர்ப்பது என்றார் .நீ வீட்டிற்கு வந்த பின் தான் அதிர்ஷ்டம் கதவை தட்டியது. தொட்டதெல்லாம் துலங்க ஆரம்பித்தது. இன்றைக்கு இந்த அளவு வசதியான மருத்துவமனையில் வைத்தியம் பார்க்க முடிகிறது என்றால் அதற்கு காரணம் நீதான். ரமேஷும், நீயும் எவ்வளவு சண்டையிட்டுக் கொண்டாலும் என் ஸ்தானத்தில் இருந்து அவனை நீ பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பாவையும் நன்றாக பார்த்துக் கொள் நீ செய்வேன் என்று எனக்கு சத்தியம் செய்து கொடு என்றாள். கோகிலா அழுது கொண்டே சத்தியம் செய்தாள். சரஸ்வதி கோகிலாவிடம் நாம் வீட்டிற்கு செல்லலாம் என் உயிர் அங்குதான் போக வேண்டும் என்றாள். மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு கூட்டி வந்தனர் ரமேஷ் வந்துவிட்டான். சரஸ்வதி கோகிலாவின் மடியில் தலை வைத்து படுக்க வேண்டும் என்றாள். கோகிலா தன் மடியில் அம்மாவை படுக்க வைத்தாள். கோகிலாவின் கையை பற்றியபடியே சரஸ்வதியின் உயிர் பிரிந்தது. ரமேஷ் கதறினான், கோகிலா அப்பொழுதே முடிவெடுத்து விட்டாள், தன் கணவரையும்,குழந்தைகளையும் இந்தியா வரச்சொல்லி அப்பாவையும் தம்பியையும் திறம்பட கவனித்து அம்மாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று தன் கணவனுக்கு போன் செய்தாள்
******************