ஒரு நவம்பர் மாத ஞாயிற்றுக்கிழமை.
சில்லென்ற குளிர்க்காற்றும் சுத்தமான சாரல் மழையும் சூரியனை ஒளித்து வைத்துவிட்ட வெற்றிக் களிப்பில், போட்டி போட்டுக்கொண்டு டூயட் பாடிக் கொண்டிருந்த இதமான சூழல். போர்வைக்குள் சுருண்டு படுத்துக்கொண்டு தலையை நீட்டி எட்டிப் பார்ப்பதுபோல கனமழைக்கு நடுவே ஆங்காங்கே கண்களுக்கு தட்டுப்படும் கட்டிடங்கள் நிறைந்த சிங்காரச் சென்னை.
பணக்காரத்தனத்திற்கே உரித்தான மிடுக்கோடு பிரம்மாண்டமாய் காட்சியளித்துக் கொண்டிருந்த அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் பிரதான நுழைவு வாயிலில், கடந்த வாரம்தான் சென்னைக்கு இறக்குமதியாகி இருந்த ஒரு நவீன ரக சொகுசு கார், தனது பளபளப்பான உடம்பை நுழைத்தபோது மாலை மணி ஐந்து. இருள் சூழத் துடிக்கும் அந்த நேரத்தில், கனமழை புயல்மழையாய் உருமாறியிருந்த அந்த நேரத்தில், குளிர்க் காற்று சூறைக்காற்றாய் சுழன்றடிக்கத் துவங்கியிருந்த அந்த நேரத்தில், கார் கண்ணாடிகளின் தண்ணீரை துடைப்பதில் வைப்பர்கள் தீவிரமாய் இயங்கிக் கொண்டிருந்த அந்த நேரத்தில், கார்கள் தங்களின் பார்க்கிங் ஏரியாவிற்கு சென்று பதுங்கிக் கொள்ள வழி ஏற்படுத்திக் கொடுப்பதிலும் பார்க்கிங் பகுதியில் இருந்து வெளியேறும் கார்களை சேதாரம் இல்லாமல் வழியனுப்பி வைப்பதிலும் யூனிஃபார்ம் வித் ரெயின்கோட்டுடன் செக்யூரிட்டிகள் கொட்டும் மழையில் விறுவிறுப்பாய் இயங்கிக் கொண்டிருந்த அந்த நேரத்தில், பார்க்கிங் பகுதிக்குப் போய் நல்ல பிள்ளையாக நிதானமாய் சொருகிக் கொண்டது அந்த சொகுசு கார்.
ஹேண்ட் பிரேக்கை இழுத்துவிட்டபடி சீட் பெல்ட்டை தளர்த்தினான் டிரைவிங் சீட்டிலிருந்த அந்த இளைஞன். சிவகார்த்திகேயனை சட்டென்று நினைவுக்கு கொண்டுவரும் உருவ அமைப்பு.
கருகரு கோரைத் தலைமுடியை கைவிரல்களால் கண் இமைக்கும் நேரத்தில் சரிசெய்துகொண்டு புன்சிரிப்போடு பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தான்.
அந்த இளம்பெண் அமர்ந்திருந்தாள்.
ஸ்லீவ்லெஸ் சுடி வித் ஸ்கின் கலர்டு லெக்கின்ஸ் அணிந்திருந்த அவளின் கண்களில் ஒருவித காந்தப் பார்வை. இதயத்தின் லப்-டப் இயக்கத்தில் ஒருவித பரபரப்பு.
அடுத்த வினாடி, ஆள்காட்டி விரலால் கம்ப்யூட்டர் மவுசை க்ளிக் செய்வதுபோல, தனது இடது கண்ணை அவளை நோக்கி க்ளிக்கினான் அவன்.
“செம்ம்ம க்ளைமேட் இல்ல…?”
“ம்”
“போலாமா…?”
அவள் புன்முறுவலோடு தலையசைத்தாள்.
“போலாமே…!”
2.
வெள்ளக்காடாய் மாறிப்போயிருந்த வடசென்னையின் ஒரு குடியிருப்புப் பகுதி. இன்னும் ஐந்தே நிமிடங்கள் இந்த நிலை நீடித்தால் கூட வீட்டிற்குள் தண்ணீர் நுழைந்துவிடும் என்கிற அளவிற்கு கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது கனமழை. பத்துக்குப் பத்து அளவில் நிறைய வீடுகள் கொண்ட அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், உள்ளேயிருந்த அத்தனை பொருட்களுக்கும் ஒரே பாதுகாப்பாய் தெரிந்தது அந்த ஒரே ஒரு இரும்புக் கட்டில் மட்டுமே. அந்த கட்டிலின் மேல் சில பித்தளை பாத்திரங்கள், கியாஸ் சிலிண்டர், இரண்டு பாய், இரண்டு தலையணை, ஒரு பச்சை நிற பிளாஸ்டிக் குடம், அரசாங்கம் கொடுத்த இலவச டிவி, மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் என அந்த அறையிலிருந்த அத்தனை பொருட்களும் சிரமப்பட்டு நெருக்கியடித்து வைக்கப்பட்டிருக்க, அவைகளோடு குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமியும் அவளின் சகோதரனான மூன்று வயது சிறுவனும் உட்கார வைக்கப்பட்டிருந்தனர். நேர் எதிரே சுவரில் வாடிய சாமந்திப்பூ மாலையுடன் தெரிந்த பிரேமிடப்பட்ட அந்த போட்டோவில் மவுனமாய் வாழ்ந்து கொண்டிருந்தார், சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க அந்த சிறுவர்களின் தந்தை. தனது பழைய புடவை, மறைந்த தனது கணவரின் வேட்டி, இன்னும் சில வீண் துணிகள் மற்றும் சாக்குப் பைகளை வைத்து சுற்றி ஒரு தடுப்பு போல செய்து, சேறும் சகதியும் பாம்பும் பூரானும் கொண்ட மழைநீர் வாசற்படியை தாண்டி உள்ளே நுழையாதவாறு தடுத்துக் கொண்டிருந்தாள், முப்பத்தைந்தைத் தாண்டிய வயதுடைய, அந்த சிறுவர்களின் தாய். கண்களில் ஒரு சோகம் தெரிந்தாலும் அதனை மீறி கனமழை வெள்ளத்தில் இருந்து தன் பிள்ளைகளைக் காக்க வேண்டுமே என்கிற பரிதவிப்பு செயலில் வெளிப்பட்டது. கனமழையின் வேகம் இப்போது இன்னும் கூடியிருந்த நிலையில், தண்ணீரின் அளவு அதிகரித்துக்கொண்டே வந்து மேல்மட்ட வாசற்படியைத் தொட்டது. அதே நேரத்தில் கட்டிலின் மேலிருந்த சிறுவனின் குரல் கேட்டது.
“அம்மா பசிக்குதும்மா…”
“ஆமாம்மா எனக்கும் பசிக்குது…” சிறுமியும் குரல் கொடுத்தாள்.
தண்ணீரில் நீந்தி சுவரில் ஊர்ந்து வீட்டுக்குள் நுழைய முற்பட்ட ஒரு விஷத் தேளை, தென்னை மரத் துடைப்பத்தின் அடிப்பாகத்தால் ஓங்கி ஒரு போடு போட்டு நசுக்கிக் கொண்டிருந்த அந்த பெண், தன் பிள்ளைகளின் குரல் கேட்டுத் திரும்பினாள்.
வேகமாய் வந்து பக்கவாட்டு சுவர் அலமாரியில் பிளாஸ்டிக் கவரில் சுருட்டி வைத்திருந்த ஒரு பிஸ்கெட் பாக்கெட்டைப் பிரித்து இருவருக்கும் கொடுத்துவிட்டு, இருவரின் கன்னங்களையும் வருடிவிட்டு சொன்னாள்.
“இத சாப்பிட்டுக்கிட்டே இருங்க செல்லங்களா… அம்மா இன்னும் கொஞ்ச உங்களுக்கு சாப்பாடு செஞ்சி குடுக்குறேன்… ம்…?”
சொல்லிவிட்டு இருவரின் கன்னத்திலும் அன்பு முத்தம் கொடுத்துவிட்டு திரும்பினாள். மழை வெள்ளத்தோடு மீண்டும் பரிதவிப்புப் போராட்டம்.
3.
புயல்மழை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்க, ஏற்கெனவே புக்கிங் செய்திருந்த நான்காவது தளத்தில் உள்ள அந்த பன்னிரண்டாம் எண் அறைக்குள் இருவரும் பிரவேசித்தனர். டிஜிட்டல் டோர் லாக், எல்இடி டிவி, ஒன் எய்ட்டி டிகிரி டோர் லென்ஸ், எமர்ஜென்சி இன்டர்காம், ஹாட் அன்டு கோல்ட் மினரல் வாட்டர் டிஸ்பென்சர் என அனைத்து அத்தியாவசிய அம்சங்களும் கொண்ட அந்த அறையில், அவர்கள் தற்போது வந்திருக்கும் ‘அந்த’ பயணம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காகவே பணியாளர்கள் மிகவும் சிரத்தையோடு அந்த அறையை நேர்த்தியாக அழகுபடுத்தியிருக்கிறார்கள் என்பதை மெத்தை விரிப்பின் சுத்தத் தன்மையும் பில்லோக்கள் இரண்டின் நளின நெருக்கமும் நேர்த்தியாகவே வெளிப்படுத்தின.
கதவை லாக் செய்துவிட்டு லக்கேஜ்களை செல்ஃபில் வீசிவிட்டு இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
பார்வைப் பரிமாற்றங்களில் ஆயிரம் படபடப்புகள்… லட்சம் சிறகுகள்… கோடி மின்மினி பூச்சிகள்… எண்ணிலடங்கா இளமைத் துள்ளல்கள்.
அவளின் நெற்றியில் சரிந்த நான்கைந்து தலைமுடிகளை தனது வலது கரத்தால் காதோரம் தள்ளிவிட்டவாறு அந்த காந்தக் கண்களைப் பார்த்தான்.
“இந்த சுட்சுவேஷனுக்காகத்தான் இவ்ளோ நாள் நாம காத்துட்டு இருந்தோம் இல்ல…!?!”
சில்லென்ற அவனது கைவிரல்களின் நுனி வருடியதில் லேசாய் உடல் சிலிர்க்க, நெற்றி சுருக்கினாள் அவள்.
“ம்…”
4.
மழையின் வேகம் அதிகரித்துக் கொண்டிருந்த நிலையில் அடுத்த சில நிமிடங்களில் நீர்மட்டம் உயர்ந்து, அந்த துணித் தடுப்புகளை உடைத்துக்கொண்டு மழைநீர் வீட்டிற்குள் நுழையத் தொடங்கியது. கண்ணீர் ததும்பும் விழிகளோடு செய்வதறியாது அந்த பெண் திகைத்துக் கொண்டிருக்க, கைகளில் உடைந்த பிஸ்கட்டுகளோடு அவளின் இரு பிள்ளைகளும் மிரட்சியாய் பார்த்துக் கொண்டிருக்க, அந்த நேரத்தில் ரெயின் கோட் அணிந்த செய்தியாளர் குழு ஒன்று கேமரா எக்யூப்மென்ட்ஸ்களோடு படகில் வந்து வாசற்படியை சமீபித்தது.
படகில் இருந்தவாறே அவர்கள் கேமராக்களை ஆன் செய்ய, அவர்களில் இரண்டு பேர் மட்டும் மைக்குகளை வாரிக்கொண்டு அந்த வாசற்படிக்குத் தாவினார்கள். பிரதான தொலைக்காட்சி ஊடகங்களின் அலுவலகங்களிலிருந்து வந்த ஸ்டேண்ட்-பை இன்ஸ்ட்ரக்சன்ஸ் படி லைவ் மோட்-க்குத் தயாரானார்கள்.
அவர்களை பார்த்ததும் வெளிப்பட்ட கோபத்தை கட்டுப்படுத்த அந்த பெண் முயன்று கொண்டிருக்க, செய்தியாளர்களில் ஒருவன் அவளை ஏறிட்டான்.
“லைவ் எடுக்குறோம்மா… இந்த மழைக்காலத்துல நீங்க சந்திக்கிற பிரச்சனை, உங்களோட கோரிக்கையை சொல்லுங்க… நாங்க கேள்வி கேட்கும்போது நீங்க ஒவ்வொன்னா சொல்லலாம்”
சொல்லிக்கொண்டே கேமரா பர்சன்ஸ்-க்கு கட்டை விரலை உயர்த்தி சிக்னல் செய்துவிட்டு கேமராவை பார்த்தான்.
“இப்ப நாம கொருக்குப்பேட்டை ஏரியால உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில இருக்கிறோம்… கனமழையால இந்த பகுதி முழுவதுமே வெள்ளக்காடாய் மாறியிருக்கிறதை நம்மால பார்க்க முடியுது… வீடுகளுக்குள்ள மழைநீர் போக ஆரம்பிச்சதுனால இந்த பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி இருக்காங்க… இப்போ நாம இந்த வீட்ல இருக்கிற ஒரு பெண்மணி கிட்ட பேசலாம்…”
சொல்லிலிட்டு அந்த பெண்ணின் முன்னால் மைக்கை நீட்டினான்.
“சொல்லுங்கம்மா… மழை வெள்ளம் வீட்டுக்குள்ள புகுந்ததுனால உங்களுக்கு ஏற்பட்டிருக்கிற கஷ்டத்த புரிஞ்சுக்க முடியுது. இந்த நிலைமையில உங்களோட கோரிக்கை என்ன…?”
ஏற்கெனவே இவர்களின் வருகையால் கடும் கோபத்தில் இருந்த அந்த பெண், இப்போது கோபத்தின் உச்சிக்கே சென்றாள்.
“ஒரு கோரிக்கையும் கிடையாது, எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்ல, நாங்க சந்தோசமா இருக்கிறோம், நீங்க போயிட்டு வாங்கப்பா…”
சொல்லிவிட்டு வீட்டில் தேங்கிக்கொண்டிருந்த தண்ணீரை லேசாய் உடைந்துபோயிருந்த ஒரு சிறிய பக்கெட்டில் அள்ளி வெளியே வீச ஆரம்பித்தாள்.
5.
கட்டிலுக்கு பக்கவாட்டில் இருந்த டீஃபாயின் மேல் அவர்களின் இரண்டு செல்ஃபோன்கள்… டிவியில் மீடியம் சவுண்டில் ஒரு லேட்டஸ்ட் தமிழ்ப்பட ரொமான்டிக் சாங்… ஜன்னலுக்கு வெளியே புயல் மழை… கட்டிலில் அந்த இருவர்…
ஒருவர் முதுகில் ஒருவர் சாய்ந்துகொண்டே ஹஸ்கி வாய்ஸில் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.
அவள் கேட்டாள்.
“ஹேய்… இந்த மாதிரி ஜில் க்ளைமேட்ல உனக்கு என்ன ஞாபகம் வரும்…?”
யோசித்தான்.
“ம்… சூடா அம்மா கையால காஃபி. உனக்கு…?”
“எனக்கா…? சொன்னா சிரிக்க கூடாது…?”
“சிரிக்க மாட்டேன். சொல்லு…”
“தமிழ் சினிமால வர்ற ரொமான்ட்டிக் சீன்ஸ்”
“ஆஹா…!”
“கேளு… கொஞ்சம் பழசுதான் ஆனா செமயா இருக்கும்”
“ம்…”
“பைக்ல அவளுக்கு லிஃப்ட் குடுத்த நேரம் இப்படி மழை கொட்டுதேன்னு கவலைப்பட வேண்டிய நம்ம ஹீரோ, அப்படியெல்லாம் கவலைப்படாம, அந்த ஹீரோயினை தன்னோட வீட்டுக்கே கூட்டிக்கிட்டு போய் ஒரு டவல் எடுத்து குடுத்துட்டு ஃபிரஷ்அப் பண்ணிக்க சொல்லும்போது ரெண்டு பேருக்கும் நடுவுல ஒரு மவுனமான கான்வர்சேஷன் நடக்குமே…”
முதுகில் சாய்ந்திருந்தவன் திரும்பி அவள் கண்களை நோக்கினான்.
“கொஞ்சம் படபடப்பு… கொஞ்சம் பயம்… கொஞ்சம் தைரியம் எல்லாம் கலந்த மாதிரி…”
“அதே…”
அப்போது அவள் கண்ணின் கருவிழிக்குள் தன் பிம்பம் பார்த்தான் அவன்.
“நிறைய தமிழ்ப் படம் பார்ப்பியோ…!?!”
அதை பெரிதாக உள்வாங்கிக் கொள்ளாத அவள் திடீரென பரபரத்தாள்.
“ஹேய்… இங்க நாம ரெண்டு பேர் மட்டும் தானே இருக்கோம்”
“ஆமா”
“அப்புறம் ஏன் ஹஸ்கி வாய்ஸ்ல பேசுறோம்”
“அட… ஆமா”
“சரி அத விடு… கொஞ்ச நேரம் மழையை ரசிக்கலாமா… ஜன்னல் ஓரமா போய்…”
“ம்… போலாமே”
போனார்கள்.
திரையை விலக்கி ஜன்னலை திறந்தார்கள்.
ஜில்லென்ற குளிர்க்காற்று இருவரையும் தழுவிக் கொண்டது.
பட்டுத் தெறிக்கும் மழைத் துளிகளை ரசித்துக் கொண்டிருக்கும் போதே அந்த மழையிலும் கூட்டமாய் ஏழெட்டு பறவைகள் வடக்கிலிருத்து தெற்கு நோக்கி அழகான வரிசையில் வேகமாய் பறந்து போய்க்கொண்டிருந்தன. கனமழையிலும் கடமை தவறாது செயல்படும் அதன் மனோதிடத்தை கண்டு வியந்தான் அவன்.
“நான் ஒன்னு சொல்லவா…?”
மழைத்துளிகள் மீதான பார்வையை விலக்காமலேயே அவள் கேட்க, அவன் திரும்பினான்.
“ம்…”
“நீ என்கிட்ட நார்மலா பேசிட்டிருந்தாலும் உன் மனசு இங்க இல்ல… கரெக்டா…?”
சொல்லிவிட்டு திரும்பி அவன் கண்களை நோக்கினாள்.
“நி.. நி.. நீ என்ன சொல்ற…?”
“உன் மனசு இங்க இல்லன்னு சொல்றேன்”
பார்வையை மீண்டும் ஜன்னலுக்கு வெளியே கொண்டுபோனான் அவன்.
“உண்மைதான். என்னால உன்னை ரொம்ப நேரம் ஏமாத்த முடியாது. எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா…?”
“சொல்லு”
“இப்ப நான் கொஞ்சம் வெளியே போகணும். நான் மட்டும், தனியா. சீக்கிரம் வந்துடுவேன்”
“போகக்கூடாதுன்னு சொல்லமாட்டேன்”
அவன் ஆச்சரியமாய் திரும்பிப் பார்க்க, அவனையே பார்த்துக் கொண்டிருந்த அவள், அப்படியே அவனைக் கட்டிக்கொண்டாள்.
“நீ எங்க போறேனு எனக்கு தெரியும். போய்ட்டு வா… ஆல் த பெஸ்ட். நான் வெயிட் பண்றேன்”
6.
அந்த பெண்ணின் பதிலை சற்றும் எதிர்பாராத செய்தியாளர்கள் அதிர்ச்சியில் பரபரத்தனர்.
அடுத்த கேள்வியை அவன் கேட்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கும்போதே அக்கம்பக்கத்து வீடுகளில் இருந்த குடியிருப்புவாசிகள் இடுப்பளவு நீரில் சிரமப்பட்டு அங்கு வந்து சூழ்ந்துகொண்டார்கள்.
“ஏய்… டீவி காரங்கடி…”
“போன வாட்டி குடிதண்ணி பிரச்சினை வந்தப்போ இப்படித்தான் வந்தாங்க”
“வெயில் காலம் மழை காலம்னு வருசத்துக்கு ரெண்டு தடவ வருவாங்க… கேள்வி கேட்டுட்டு போவாங்க இது ஒன்னும் புதுசில்லையே”
அந்த பகுதி மக்கள் தொடர்ந்து முனுமுனுத்தவாறு அந்த பெண்ணை சூழ்ந்துகொண்டு செய்தியாளர்களை பார்க்க, அவர்கள் திகைத்துக்கொண்டே மீண்டும் ஆரம்பினர்.
பக்கெட்டில் தண்ணீரை அள்ளி ஊற்றிக் கொண்டிருந்த அந்த பெண்ணிடம் சற்று குணிந்து மைக்கை நீட்டினான் அவன்.
“சொல்லுங்கம்மா… இந்த இக்கட்டான நிலைமையில உங்களோட கோரிக்கை என்ன…? அமைச்சர்கள், அதிகாரிகள் யாராவது வந்து பார்த்தாங்களா…? அரசாங்கம் என்ன செய்யணும்னு எதிர்பார்க்கிறீங்க…?”
அவள் நிமிர்ந்தாள்.
“வருசா வருசம் இந்த மாதிரி மழைக்காலத்துல கஷ்டப்படுறது எங்களுக்கு பழகிப்போச்சு… டிவில இருந்து வந்து கேள்வி கேக்குறது உங்களுக்கும் பழகிப்போச்சு… அரசியல்வாதிங்க வேட்டிய மடிச்சி கட்டிகிட்டு வெள்ளத்துல இறங்கி பார்த்துட்டு நிவாரணம் குடுத்துட்டு போறதும் அதிகாரிங்க வந்துட்டு பார்த்துட்டு போறதும் நடந்துகிட்டுதான் இருக்குது. ஆனா தீர்வு வரலையே”
“இல்லம்மா… நீங்க உங்க பிரச்சினைகளை சொன்னாதான்…”
கேள்வியை முடிப்பதற்குள் அவள் குறுக்கிட்டாள்.
“அதிகாரிகளுக்கும் ஆட்சியில இருக்கிறவகளுக்கும் தெரிஞ்சி, நடவடிக்கை எடுப்பாங்கன்னு சொல்றீங்களா…? சரி. மழைக்காலத்துல வெள்ளத்துல மிதக்குறதும் வெயில் காலத்துல குடிக்க தண்ணியில்லாம கஷ்டப்படுறதும் இந்த மெட்ராசுக்கு புதுசா என்ன…? மழைக்காலத்துல குடியிருக்கிற ஏரியாவுல தண்ணி நிக்கிற பிரச்சினைக்கு நிரந்தரமா ஒரு முடிவு கட்டணும்னு திட்டம் போட்டு இப்பயிருந்தே வேலை பார்க்கலாமில்ல…? அத உட்டுட்டு….” பேசிக்கொண்டே போனாள் அவள்.
7.
டீஃபாயில் அவளின் செல்ஃபோன் மட்டும் தெரிய, அதை எடுத்துக்கொண்டு அவள் கட்டிலில் சாய்ந்தபோது மாலை மணி ஐந்து நாற்பது.
ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா பக்கங்களில் கொஞ்ச நேரம் தொடுதிரையை தடவிக்கொண்டிருந்தவள்… சுவரில் அனாதையாய் இயங்கிக் கொண்டிருந்த தொலைக்காட்சித் திரையை நோக்கினாள். இடையிடையே நட்பு வட்டங்களில் இருந்து வரும் சோஷியல் மீடியா கான்வர்சேஷன் அண்டு போஸ்ட்களுக்கு ரிப்ளை செய்துகொண்டே டிவி சேனல்களை மாற்றிக் கொண்டிருந்தாள். சில நிமிடங்களில் ஒரு தமிழ் செய்தி தொலைக்காட்சி சேனலுக்கு தாவியவள், அந்த செய்தியை பார்த்ததும் அப்படியே நின்றாள்.
சென்னை மழை வெள்ள செய்திகளுக்கு மத்தியில் அந்த ஃபிளாஷ் நியூஸ் சுடச்சுட டெலிகாஸ்ட் ஆகிக் கொண்டிருந்தது.
“காலையில் திருமணம்… மாலையில் மக்கள் பணி – அதிரடி காட்டும் சுயேட்சை எம்எல்ஏ தினேஷ் குமார்”
“தமது தொகுதிக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் நேரில் ஆய்வு”
“மழை வெள்ள பாதிப்புகள் விரைவில் சரி செய்யப்படும் என உறுதி”
“தொடரும் சென்னை பெருவெள்ள பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வு காண்பது தொடர்பாக சற்று நேரத்தில் முதல்வரை சந்திக்க இருப்பதாக தகவல்”
செய்திகளை பார்த்துக்கொண்டே வாட்ஸ் ஆப் எஸ்எம்எஸ்களுக்கு ரிப்ளை செய்துகொண்டிருந்தாள் அவள்.
சரியாய் இருபது நிமிட இடைவெளியில் மீண்டும் ஒரு ஃபிளாஷ் நியூஸ் உற்பத்தியானது.
“முதல்வருடன் சுயேட்சை எம்எல்ஏ தினேஷ் குமார் திடீர் சந்திப்பு”
“நீர் மேலாண்மை தொடர்பான தமது ஆய்வுக் கட்டுரைக்கு செயல்வடிவம் கொடுக்க வலியுறுத்தல்”
பார்த்துக் கொண்டிருக்கும் போதே கூடுதல் விவரங்களை ஒரு செய்தியாளர் வழங்கிக் கொண்டிருந்தார்.
‘……… கடந்த சட்டமன்ற தேர்தலில் தினேஷ் குமார் சுயேட்சையாக களமிறங்குவதற்கு முன்புவரை சென்னை பல்கலைக்கழகத்தில் சுற்றச்சூழல் துறை உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்தார். அப்போது நீர் மேலாண்மை தொடர்பாக அவர் மேற்கொண்ட ஆய்வுகள் பற்றி, துறை சார்ந்த வல்லுநர்களிடம் அவ்வப்போது ஆலோசித்து வந்தார். இந்நிலையில் சென்னையில் மழை வெள்ளத்தால் பல இடங்களில் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ள இந்த சூழலில், முதல்வரை நேரில் சந்தித்து இதுதொடர்பாக பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. சென்னை பெருநகர எல்லைக்கு உட்பட்ட சில இடங்களில் செயற்கை நீர்த்தேக்கங்களை அமைத்து மழைநீரை சேமிப்பதை மையமாகக் கொண்ட இந்த திட்டத்திற்கு, போதுமான நிதி ஒதுக்கி, திட்டப் பணிகளை விரைவில் துவக்கினால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரக்கூடும் என்றாலும், இதற்கு பொருளாதார ரீதியாக பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எனினும் பெரும்பான்மைக்கு ஓர் இடம் குறைவாக பெற்று சுயேட்சை எம்எல்ஏ தினேஷ் குமார் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ள முதலமைச்சர், அவரின் இந்த திட்டத்திற்கு விரைவில் ஒப்புதல் வழங்க அதிக வாய்ப்புள்ளது என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது. மேலும்…..’
சென்னை செயற்கை நீர்த்தேக்க திட்டம் பற்றி தொடர்ந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த அந்த செய்தியை அவள் பார்த்துக்கொண்டிருந்த அதே நேரத்தில், முதலமைச்சரை சந்தித்துவிட்டு புறப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் தினேஷ் குமார், சரியாய் இருபது நிமிட கார் பயணத்தில், பணக்காரத்தனத்திற்கே உரித்தான மிடுக்கோடு பிரம்மாண்டமாய் காட்சியளித்துக் கொண்டிருந்த அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் பிரதான நுழைவு வாயிலில் மீண்டும் தனது காரை நுழைத்துவிட்டு, நான்காவது தளத்தில் உள்ள அந்த பன்னிரண்டாம் எண் அறைக்குள் நுழைந்தபோது, டிவி பார்த்துக்கொண்டே காத்திருந்த தினேஷ் குமாரின் மனைவி… கட்டிலில் இருந்து இறங்கி வந்து அணைத்துக் கொண்டாள்.
****