அக்னி நட்சத்திர வெயில் தன்னுடைய உஷ்ணம் முழுவதையும் என் தலையில் இறக்கி உடம்பிலிருந்த தண்ணீரை முழுவதுமாக உறிஞ்சு எடுப்பதுபோல் இருந்தது. பதினாலாவது மாடியில் கட்டிட வேலை செய்பவர்களை மேற்பார்வை செய்யும் பணியில் இருந்தேன். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கண்கள் மயங்கி மூடுவது போல் உணர்ந்தேன். எங்கேயாவது நிழல் கிடைக்குமா எனத் தேடி ஒரு சுவரின் ஓரத்தில் போய் நின்றது என் உடல். அருகிலிருந்த எங்கள் நிறுவனத்தின் மற்றொரு கட்டிடத்தில் இருபதாவது மாடியில் இரண்டு பேர் தங்கள் உடம்பில் கயிற்றைக் கட்டியபடி அந்தரத்தில் தொங்கிக்கொண்டு கையில் இரும்புக் கம்பியைப் பிடித்து வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களை வெயில் எந்த அளவிற்க்குச் சுட்டெரிக்கும் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.
நிழல் என்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டிருந்தது. அந்த இன்பத்தில் கண்களைச் சற்று மூடி இளைப்பாறிய பொழுது ஓவென அலறும் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டுக் கண்களைத் திறந்து பார்த்தேன். வேலை செய்துகொண்டிருந்தவர்கள் தங்கள் கைகளில் உள்ள பொருட்களை ஆங்காங்கே போட்டுவிட்டு வேகமாகக் கீழே ஓடினார்கள். சிலர் மேலே நின்றபடி தரைத்தளத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். நானும் கீழே இறங்குவதற்கு முற்பட்டேன். அதற்கு முன்பு அருகிலிருந்த கட்டிடத்தை உற்றுப் பார்த்தேன் அங்கே வேலை செய்துகொண்டிருந்தவர்களில் ஒருவரைக் காணவில்லை. அப்படி நடந்திருக்கக் கூடாது என்று என் மனம் சொல்லியது. வேகமாக அங்கிருந்து கீழே இறங்கி ஓடினேன். பக்கத்துக் கட்டிடத்தில் கூட்டமும் அலறல் சத்தமுமாக இருந்தது. என்னுடைய மனது சற்று பலவீனம் அடைந்து அருகில் சென்று பார்ப்பதற்கு சம்மதிக்கவில்லை.
அங்கு நின்று கொண்டிருந்த காவலாளியிடம் விசாரித்ததில் இருபதாவது மாடியில் வேலை செய்துகொண்டிருந்த ஒருவருடைய கயிறு அறுந்து விழுந்துவிட்டதாகக் கூறினார். கூட்டத்தை நோக்கி இரண்டு அடி வைத்தேன். கீழே விழுந்தவரின் நண்பர்கள் மூன்று பேர் கதறிக் கதறி அழுது கொண்டு இருந்தார்கள். அவர்களுடைய மொழி தமிழ் இல்லை. வேறு ஏதோ ஊரிலிருந்து வேலைக்காக நமது ஊருக்கு வந்தவர்கள். அவர்களின் அலறல் சத்தமும் கூடி நின்றார்கள் பேச்சுக்களும் முன்னால் சென்று இறந்து போனவரின் உடலைப் பார்ப்பதற்குத் தைரியம் இல்லாமல் செய்தது.
கட்டிட நிறுவனத்தின் செக்யூரிட்டி அலுவலர்கள் அங்கிருந்த கூட்டத்தை அப்புறப்படுத்தினர். சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்து அங்கே சிதறிக்கிடந்த உடலை பொறுக்கி எடுத்துச் சென்றது. மாலை நான்கு மணி நெருங்கிவிட்டதால் அத்துடன் அன்றைய வேலையை நிறுத்திவிட்டு அனைவரையும் வீட்டிற்குப் போகச் சொல்லிவிட்டனர்.
இரவு முழுவதும் உறக்கமில்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். அவரை நான் நேரில் சரியாகக் கூட பார்த்ததில்லை. ஆனால் என் தலை முழுவதும் அவர் மற்றும் அவருடைய குடும்பம் பற்றிய சிந்தனைகளே ஓடிக்கொண்டிருந்தது. எங்கோ வடமாநிலத்தில் ஒரு சிறிய கிராமத்தில் ஒரு குடிசை வீட்டுக்குள் ஒரு பெண் இரண்டு மூன்று குழந்தைகளுடன் தன் கணவரை இழந்து என்ன செய்வதென்றே தெரியாமல் இருப்பது போன்ற உள்ளுணர்வு என்னுள் தோன்றி என்னை வருத்தமடையச் செய்தது. எங்கேயாவது ஒரு விபத்தைப் பார்த்தால் என் மனது முதலில் யார் என்றே தெரியாத அவரது குடும்பத்தின் நிலைமையைப் பற்றித்தான் யோசனை செய்துகொண்டிருக்கும். அதே சிந்தனையில் தான் இன்றும் படுத்திருந்தேன்.
மறுநாள் காலையில் வழக்கம்போல் வேலைக்குப் புறப்பட்டு வந்தேன். நேற்று விபத்து நடந்த கட்டிடத்தின் அருகில் காவல் அதிகாரிகள் நின்றுகொண்டு அவர் விழுந்த இடத்தை சுற்றி வெள்ளை நிறத்தில் ஒரு உருவத்தை வரைந்து அந்த இடத்தின் அருகில் யாரும் நுழையாத வண்ணம் கயிறுகளைக் கட்டி அந்தக் கட்டிடத்தில் யாரையும் வேலைக்கு அனுமதிக்காமல் அந்த நபர் எப்படி விழுந்தார் என்பதைப்பற்றி விசாரணை நடத்திக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்தபடி உள்ளே நுழைந்தேன். ஆனால், அங்கே அது மாதிரியான விஷயங்கள் எதுவும் நடக்காமல் வழக்கம்போல் அனைத்து வேலைகளும் நடந்து கொண்டிருந்தது எனக்குப் புதிராக இருந்தது. நேற்று நடந்தவை அனைத்தும் கனவாக இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே அருகிலிருந்த அந்தக் கட்டிடத்திற்கு நடந்து போனேன். அங்கே வழக்கமாக இருக்கும் காவலாளியை காணவில்லை. வேலைக்குத் தயாராக நின்றுகொண்டிருந்த நபர்கள் அனைவரையும் பார்த்தவாறு நடந்தேன்.
நேற்று கதறி அழுத அந்த மூன்று பேரையும் காணவில்லை. அவர்களின் அழுகை முகம் மற்றும் கதறி அழுத குரல் என் மனதில் நன்றாகவே பதிந்து கிடந்தது. அந்த ஓலங்கள் என் காதில் ஒலித்துக் கொண்டேதான் இருந்தது. அங்கு இருந்தவர்களிடம் அந்த மூன்று நபர்களைப் பற்றியும் விபரம் கேட்டேன். எந்த பதிலும் கிடைக்கவில்லை. என்னுடைய வேலையைத் தொடங்குவதற்கு முடியாமல் நேராகக் கட்டிடத்தின் இன்ஜினியர் அல்லது மேலாளரை சந்தித்து என்ன நடந்தது, அந்த நபரின் நிலைமை என்ன என்பதைத் தெரிந்துகொள்ளக் கட்டிடத்தின் உள்ளே நுழைந்தேன். ஏசி அறையில் அமர்ந்திருந்ததால் மேனேஜருக்கு எனக்குப் பதில் சொல்ல வேண்டுமென்று தோணவில்லை போலும். நான் கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் என்னை வெளியில் சென்று என்னுடைய வேலையை பார்க்கச் சொல்லி விட்டார்.
நேற்று ஒரு மனிதன் இங்கே இறந்து கிடந்ததற்கான எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் உலகம் இயங்கிக் கொண்டிருந்தது. என்னால் அது போன்று இயங்க முடியவில்லை. இறந்து போனவனின் உடலை சுற்றியே எனது நினைவுகள் மிதந்து கொண்டு இருந்தது. அவன் குடும்பத்தினர் வந்து அவன் உடலைப் பெற்றுக் கொண்டிருப்பார்களா? அவன் உடலைப் பார்த்து அவர்கள் எப்படிக் கதறி அழுத்திருக்கக் கூடும். அவனுடன் இந்த மூன்று நண்பர்கள் அவன் உடல் பக்கத்தில் நின்று கொண்டு அழுது கொண்டிருப்பார்களோ என ஏதேதோ சிந்தனைகள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
அதற்கு மேலும் என்னால் அன்று வேலை செய்ய முடியாமல் விடுமுறை எடுத்துக்கொண்டு அவன் உடல் நிச்சயம் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு அரசு மருத்துவமனையில் தான் இருக்கும் என்று தீர்மானித்து மருத்துவமனை நோக்கிச் சென்றேன். மருத்துவமனைக்குள் நுழையும் போது மருந்து வாடையும் ரத்த வாடையும் நாசியின் வழியாகச் சென்று மூளைக்குள் புகுந்து கொண்டது. ஆங்காங்கே மனித தலைகள் கவலை தோய்ந்த முகத்தோடு நின்று கொண்டிருந்தார்கள். மக்கள் கதறி அழுத சத்தம் மார்ச்சுவரி இருக்கும் இடத்தை எளிதில் காட்டிக் கொடுத்தது. அங்கே நின்ற காவலாளியிடம் விசாரித்ததில் அதுபோன்ற விபத்தில் சிக்கிய பிணம் எதுவும் இல்லை என்றார். அன்று முழுவதும் இறந்து போனவனின் போனவனின் உடலைத் தேடி அருகில் இருக்கும் அத்தனை மருத்துவமனைக்கும் அலைந்து திரிந்து எங்கும் அந்த பிணம் கிடைக்கவில்லை. ஒருவேளை அவனோடு உடலை அவன் சொந்த ஊருக்கு அனுப்பி இருக்கக்கூடும் என்று எண்ணிக் கொண்டே வீடு திரும்பினேன்.
மறுநாள் காலையும் அவனுடன் இருந்த அந்த மூன்று நபர்களைத் தேடிக் கிடைக்கவில்லை. வேலைக்காக அங்கு நின்று கொண்டு இருந்தவர்களிடம் அவர்களைப் பற்றிக் கேட்டும் யாருக்கும் தெரியவில்லை. கடைசியாக ஒருவர் மட்டும் தனியாக வந்து விபத்து நடந்த அன்று இரவே மூன்று பேரும் நிறுவனத்தின் வேறு கட்டிடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்விட்டதாகவும் ஆனால் எங்கு என்று தெரியவில்லை என்றும் கூறினார்.
தன்னுடன் வேலை செய்த ஒருவர் விபத்தில் இறந்து போனபின் அதற்கான காரணம் என்ன? விபத்து எப்படி நடந்தது? இறந்து போனவனின் உடல் எங்கு போனது? அவன் குடும்பத்தின் நிலைமை என்ன? என்று கூட யாரும் யோசிக்காமல் தங்கள் வேலைகளைச் செய்யக்கூடிய அளவுக்கு வறுமையில் மக்கள் இருந்துகொண்டு தான் இருக்கிறார்கள். இது போன்ற நிலைமை மற்றவர்க்கும் நாளை நேராமல் இருக்க என்ன செய்யலாம் என்று கூட தெளிவில்லாமல் தான் இருக்கிறார்கள்.
இரண்டு தினங்கள் கடந்தும் என்னால் சகஜ நிலைமைக்குத் திரும்ப முடியவில்லை. இறந்து போனவனின் குடும்ப சூழ்நிலை யோசித்துக் கொண்டிருந்தேன். காவல்துறையில் இருக்கும் எனது நண்பன் ஒருவன் மூலம் விசாரித்ததில் இரண்டு நாட்களாகக் கட்டிட விபத்தில் இறந்து போனதாக எந்த வழக்கும் வரவில்லை என்று சொன்னான். விபத்து என்பதால் போலீசில் புகார் எதுவும் தெரிவிக்காமல் அவனது உடலை அவனது உறவினர் ஒப்படைத்துவிட்டு அவனுக்கான பணப் பலன்களைக் கொடுத்திருக்கக்கூடும் என்றும் அவன் சொன்னான். இருந்தும் என் மனம் அதை ஏற்கமுடியாமல் பலவீனமாக இருந்தது.
நான்கைந்து நாட்கள் கழித்து இன்ஜினியர் ஒருவரிடம் இருந்து கிடைத்த தகவல். இறந்து போனவனுக்குக் காப்பீடு எதுவும் நிறுவனம் செய்யாததாலும் விபத்தைப் பற்றி செய்தி வெளியில் வந்தால் தங்கள் நிறுவனத்தின் பெயர் சந்தையில் குறைந்து போய்விடும் என்பதாலும் இறந்து போனவனை யாருக்கும் தெரியாமல் ஏதோ ஒரு மயானத்தில் வைத்து எரித்து விட்டதாகவும் அவன் குடும்பத்தை அழைத்து அந்த சாம்பலை கொடுத்து அவர்கள் ஏழ்மையை பயன்படுத்தி கையில் வெறும் இருபத்தைந்து ஆயிரம் ரூபாய் பணத்தை வைத்து அனுப்பி விட்டதாகவும் கூறினார். அங்கிருந்து வந்தவர்களுக்கு பாஷை தெரியாமல் யாரைத் தொடர்பு கொள்வது என்றும் தெரியாமல் சில மணி நேரம் தவித்து நின்று அழுதுவிட்டு வேறு வழியில்லாமல் புறப்பட்டுச் சென்று விட்டனர் என்று அவர் கூறியதும் எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.
எனக்கு அநியாயங்களைக் கண்டு கோபமுற்று அதை எதிர்த்துப் போராடும் தைரியம் இல்லை. ஆனால் அநியாயங்களை சகித்துக்கொண்டு அங்கே இருக்கும் அளவிற்குக் கொடூரமான மனதும் இல்லாத காரணத்தால் அந்த இடத்திலிருந்து வேலையை ராஜினாமா செய்து புறப்பட்டேன்.
இதை அத்தோடு விட்டுவிட மனம் இல்லாமல் எனக்குத் தெரிந்த நபர்கள் மூலம் ஒரு அரசியல் கட்சியின் தலைவரை நாடினேன். அவர் மூலம் போராட்டம் நடத்தி இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண நினைத்து அவரை சந்தித்தேன். அவரோ, வேற ஊரிலிருந்து வந்து இங்கு இறந்து போயிருக்கிறான். அதுவும் நான்கைந்து நாளில் கடந்து விட்டது. இதற்கு மேல் போராட்டம் செய்தால் பிரபலம் அடையாது. அதனால் தனக்கும் எந்த பெயரும் வரப்போவதில்லை என்று கைவிரித்து விட்டார்.
இன்னும் என் எண்ணங்கள் முழுவதும் எங்கோ ஒரு மூலையில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் அவன் குடும்பத்தைப் பற்றி இருக்கிறது. அநியாயமாக இறந்து போன ஒருவனுக்கு நீதி கேட்டு போராடுவதற்குக் கூட முடியாமல் அவன் உடல் தொலைந்து போனது. இறந்து போனவன் கணக்கில் வராத ஒரு பிணமாகவே மறைந்து போனான்… நன்றி