ராஜஸ்தானில் நிலவும் அரசியல் நெருக்கடியால் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவிடம் அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் புதிய பரிந்துரையை தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி, மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. மேலும், கட்சிக் கொறடா உத்தரவை மீறிய சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு எதிரான வழக்கில், 19 எம்எல்ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
இதற்கு மத்தியில், சட்ட சபையில் பெரும்பான்மையை நிரூபிக்க அசோக் கெலாட் ஆர்வம் காட்டி வருகிறார். இதனால், சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட வேண்டும் என்று ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை அடிக்கடி சந்தித்து வலியுறுத்தி வருகிறார். ஆனால், அசோக் கெலாட்டின் கோரிக்கைக்கு ஆளுநர் இசைவு கொடுக்கவில்லை. இதனால், ராஜஸ்தான் அரசியல் களத்தில் அனல் பறக்கிறது.
இந்த பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவுக்கு புதிய பரிந்துரையை அசோக் கெலாட் விடுத்துள்ளார். ஜூலை 31 ஆம் தேதி சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என அசோக் கெலாட் தனது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தொடர்பாக விவாதிக்க சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பு பற்றி எதுவும் இந்த பரிந்துரையில் இடம் பெறவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன.
முன்னதாக, சட்டமன்றத்தை கூட்டுவது தொடர்பாக அளிக்கப்பட்ட முந்தைய பரிந்துரையில், கூட்டத்தொடர் நடைபெறும் தேதி, கூட்டத்தில் விவாதிக்கப்படும் அம்சங்கள் குறித்த தகவல் இல்லை எனக்கூறி, அசோக் கெலாட்டின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்தது நினைவிருக்கலாம்.