ஈரோடு மாவட்டத்தில் ரயில் நிலையம் உள்பட 10 இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாடு அறைக்கு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை ரயில்வே தலைமை அலுவலக காவல் கட்டுப்பாடு அறைக்கு நேற்று முன்னைய தினம் இரவு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர் தன்னுடைய பெயர் அப்துல்கரீம் என்றார். மேலும் ‘ஈரோடு ரயில் நிலையம் அருகில் உள்ள பெட்ரோல் பங்க், பேருந்து நிலையம், மணிக்கூண்டு, ரயில் நிலையம் உள்பட மாவட்டம் முழுவதும் 10 இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார். இதற்காக என்னுடன் பலபேர் வேலை செய்கின்றனர் என கூறி போனை துண்டித்தார்.
இதையடுத்து ஈரோடு ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஈரோடு முழுவதும் நேற்று முன்தினம் இரவு போலீசார் உஷார்படுத்தப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. மிரட்டல் வந்த செல்போன் நம்பரின் டவர் சிக்னலை ஆய்வு செய்தபோது, ஈரோடு பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அவர் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், சங்கர்நகரை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பதும், அவர்தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் ஈரோடு ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிறைச்சாலையில் மூணுவேளை சோறு கிடைக்கும் அதனால, குண்டு மிரட்டல் விடுத்தேன் என்று கூறி போலீசையே மிரளச் செய்தவர். இப்போது, மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சிக்கியுள்ள அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.