குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (பாஜக) சார்பில் போட்டியிட்ட திரவுபதி முர்மு 3 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார். (அவர் தற்போது வரை 53.12% வாக்குகளை பெற்று முன்னிலை) அவர் 50% மேலான வாக்குகளை பெற்றிருப்பதால் அவரின் வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரதமர் மோடி நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ள வாழ்த்துச் செய்தியில், “திரவுபதி முர்முவின் சாதனை வெற்றி நமது ஜனநாயகத்திற்கு சிறந்த முன்னுதாரணமாகும்.அவருக்கு ஆதரவு அளித்த எம்பிக்கள், எம் எல் ஏக்களுக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட யஷ்வந்தா சின்ஹாவும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ள வாழ்த்துச் செய்தியில், “குடியரசுத்தலைவர் என்ற முறையில் அரசியலமைப்பின் பாதுகாவலராக முர்மு செயல்படுவார் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார். இதன் தொடர்ச்சியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி, ஜெபி.நட்டா உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த திங்கள் கிழமை நடைபெற்றது. (குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிகாலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது)
இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவும், எதிர்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்டனர். இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று தொடங்கிது. ஆரம்பம் முதலே முர்மு முன்னிலை வகித்து வந்தார். தற்போது, 3 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், மொத்தம் 748 எம்பிக்களில் 540 எம்பிக்களின் வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். (முர்மு-540 எம்பிக்களின் வாக்குகள், யஷ்வந்த் சின்ஹா 208 எம்பிக்களின் வாக்குகள்) தற்போது எம்எல்ஏக்களின் வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. அனைத்து வாக்குகளும் எண்ணி முடிக்கப்பட்ட பின்னர், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். இதற்கிடையே மற்றுமொரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, குடியரசுத்தலைவர் தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சிகளை சேர்ந்த 17 எம்பிக்கள் & 104 சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறி திரவுபதி முர்முவுக்கு வாக்களித்துள்ளனர்.(குடியரசுத் தலைவர் தேர்தலை பொறுத்தவரை யாருக்கு வாக்களிக்க வேண்டும் என அந்த கட்சியின் கொறடாக்கள் உத்தரவிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.)