2022 பொதுத்தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான 13 பேர் கொண்ட குழு இன்று கோவா பயணம்.
டெல்லி,
2022ம் ஆண்டு தொடக்கத்தில் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலத் தேர்தல்கள் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பணிகளை தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
சில வாரங்களுக்கு முன்னர் டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் 5 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. இந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா தலைமையில் 13 பேர் கொண்ட குழு இன்று கோவா செல்கிறது. இக்குழுவில் தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார், அனுப் சந்திர பாண்டே, துணைத் தேர்தல் ஆணையர்கள், சந்திர பூஷன் குமார், நித்தேஷ் வியாஸ், டி ஸ்ரீகாந்த் மற்றும் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், இணைச் செயலாளர்கள் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
நாளை ( 21.12.2021 ) இக்குழு கோவாவில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி, காவல்துறை அதிகாரிகள், அமலாக்கத் துறை அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனைக்கு பிறகு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ( மாவட்ட ஆட்சியர்கள் ) மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் உடனான ஒரு ஆலோசனை கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் தேர்தலை சுமூகமாக நடத்துவதற்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்வது குறித்தும் மாவட்ட வாரியாக கள நிலவரங்கள் குறித்தும் இந்திய தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்துவார் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நாளை மறுநாள் (22.12.2022) மாநில தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், மாநில டிஜிபி உள்ளிட்ட மூத்த அரசு அதிகாரிகள் உடன் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் மாநிலத்தில் தேர்தலுக்காக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று நாள் பயணத்தை முடித்துக் கொள்வதற்கு முன்னதாக 22ம் தேதி மாலை இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சுஷில் சந்திரா கோவாவில் செய்தியாளர்களை சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி கோவா மாநிலத்தில் தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கத்தின் பதவி காலம் 2022 மார்ச் 15ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதற்கு முன்னதாக மாநிலத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தலை நடத்தி புதிய ஆட்சியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.