வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 23 மாவட்டங்களின் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல்,தேனி, ஈரோடு,கிருஷ்ணகிரி,சேலம், தருமபுரி, திருப்பத்தூர்,வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கடலூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், நாகை, தஞ்சை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குமரிக்கடல் பகுதி, தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம். நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.