விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகள், தற்பொழுது பூமியை சுற்றி வரும் நீர்யானை அளவிலான ஒரு புதிய நிலவைக் கண்டுபிடித்துள்ளனர். தற்பொழுது பூமிக்கென்று மற்றொரு துணைக்கோள் பூமியை சுற்றி வலம்வருகிறது என்று கண்டறிந்துள்ளனர்.இந்தச் சிறு நிலவு ஒரு குறுங்கோளாகும். இதற்கு ‘2020 CD3’ என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளார்கள்.
இந்த நிலவு 1.9-3.5 மீட்டர் விட்டம் கொண்டதாகவுள்ளது, ஏறக்குறைய இதுவொரு பசுவின் அளவு அல்லது நீர்யானையின் அளவைக் கொண்டதாக இருக்கிறது. இந்த ‘புதிய நிலவு’ தற்காலிகமாக பூமிக்கு மிக அருகாமையில் இருக்கிறது என்று சர்வதேச வானியல் ஒன்றியத்தில் உள்ள மைனர் பிளானட் மையம் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கண்டுபிடித்துள்ளது.

காக்பர் வியர்சோஸ் என்ற விஞ்ஞானிகளின் குழுத் தலைவர் இந்த ‘புதிய நிலவு’ குறித்த உண்மை தகவலை தற்பொழுது டிவிட்டர் மூலம் ட்வீட் செய்து, வெளியுலகிற்கு இந்த செய்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கடந்த பிப்ரவரி 15ம் தேதி இரவு, கேடலினா ஸ்கை சர்வே என்ற அணியில் உள்ள டெடி ப்ரூயி என்ற விஞ்ஞானியும், காக்பர் வியர்சோஸ் என்ற விஞ்ஞானியும் சேர்ந்து இந்த 20வது பரிமாணமுள்ள இதைக் கண்டுபிடித்துள்ளனர்.

சூரியக் குடும்பத்தில் சுமார் பத்து லட்சத்திற்கு அதிகமான விண்கற்கள் வலம்வருவதால், இந்தச் சிறிய நிலவைக் கண்டுபிடித்தது என்பது உண்மையில் பெரிய வியப்பாகக் கருதப்படுகிறது. விண்வெளி ஆய்வுகளின் படி அறியப்பட்ட பூமியின் இரண்டாவது பருப்பொருளாக இந்த புதிய நிலவு கூறப்படுகிறது. இதற்கு முன் இதேமாதிரியான ‘2006 RH120′ என்ற பொருள் பூமியைச் சுற்றி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 2020 CD3 சிறு நிலவு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பூமியின் சுற்றுப்பாதையில் நுழைந்துள்ளது. இது அக்டோபர் 2020 முதல் 2021 மே வரை பூமியை சுற்றி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு இந்த சிறிய நிலவு பூமிக்கு மிக அருகாமையில் வரும் பொழுது இதன் உண்மை நிலை பற்றி ஆராய்ச்சி செய்யப்படும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த சிறு நிலவுகள் அல்லது சிறுகோள்கள் பூமியின் சுற்றுப்பாதையில் இருக்க காரணம், பூமியின் ஈர்ப்பு விசை மற்றும் சந்திரனிலிருந்து வரும் சூரியனின் ஈர்ப்பு விசையின் கலவை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதனால் தான் இவை ஒழுங்கற்ற சுற்றுப்பாதையில் இருக்கிறது என்று கூறியுள்ளனர்.
மற்றொருபுறம் இந்தச் சிறிய நிலவு மனிதனால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்று நாசாவின் நியர்-எர்த் ஆப்ஜெக்ட் ஸ்டடிஸ் மையத்தின் இயக்குநர் பால் சோடாஸ் கூறியுள்ளார்.
இது செப்டம்பர் 20, 1966 ஆண்டில் விண்ணில் ஏவப்பட்ட சர்வேயர் 2 லூனார் லேண்டராக கூட இருக்க வாய்ப்புள்ளது என்று பால் சோடாஸ் கூறியுள்ளார். உண்மையில் இது என்ன என்பது இந்த சிறிய நிலவு பூமிக்கு மிக அருகாமையில் வரும் பொழுது தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




