உத்தரபிரதேசத்தில் திருமண விழாவில் விருந்து சாப்பிட்டவர்களில் 50 பேர் நேற்றிரவு திடீர் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரபிரதேச மாநிலம் சீதாபூர் அடுத்த மஹ்முதாபாத்தில் நடந்த திருமண விழாவில் விருந்தினர்களுக்கு உணவு கொடுக்கப்பட்டது.
அதில், உணவு சாப்பிட்டவர்களில் சுமார் 50 பேருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நள்ளிரவில் நோயாளிகள் அதிகளவில் குவிந்ததால், மருத்துவமனையின் படுக்கையில் தலா 2 பேர் வரை படுக்கவைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து அவசரசிகிச்சை பிரிவு மருத்துவர் அன்வர் கூறுகையில், நேற்றிரவு 11 மணியளவில் திருமண விழாவில் உணவு சாப்பிட்டு மயக்கமடைந்த நிலையில் ஒருவர் மருத்துவமனைக்கு வந்தார்.
பின்னர் அவரை தொடர்ந்து அடுத்தடுத்து 50 பேர் வரை அதே பிரச்னைகாரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அனைவரும் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்துள்ளது. அனைவருக்கும் முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இப்போது அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது’ என்றார்.
தகவலறிந்த போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் திருமண ஏற்பாட்டாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.