சத்தியமங்கலம் அருகே பப்ஜி கேமுக்கு அடிமையான 16 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கள்ளிபாளையத்தில் வசித்து வந்த 9-ஆம் வகுப்பு மாணவன் அருண். இவனுக்கு வயது 16. கொரோனா காரணமாக பள்ளி திறக்கப்படாததால், அருண் பப்ஜி கேமுக்கு அடிமையாகியுள்ளான். பெற்றோர்கள் கண்டித்தும், கேம் விளையாடுவதை நிறுத்த முடியாமல் இருந்திருக்கிறான், அருண்.
சில மாதங்களுக்கு முன் பப்ஜி கேமுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், பப்ஜிக்கு அடிமையான அருண், பப்ஜியில் இருந்து வெளிவரமுடியாமல் தவித்திருக்கிறான். எனவே மன உளைச்சலில் இருந்த அருணை, அவனது பெற்றோர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று, மனநல சிகிச்சை அளித்திருக்கின்றனர். ஆனாலும், பப்ஜியில் இருந்து மீண்டு வர இயலாத நிலையில், சிறுவன் அருண் அவனது வீட்டில் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறான்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுக்குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுவன் அருண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்போது சிறுவர்கள் அனைவருமே ஆன்லைன் கேமில் மூழ்கியிருக்கும் நிலையில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை குறித்து மிகவும் பயத்துடன் காணப்படுகின்றனர். இதுபோன்று பல மாநிலங்களிலும் சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்டு வரும் சம்பவம், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.