சென்னையில் வருகிற 12ம் தேதி சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. 1,600 இடங்களில் இந்த முகாம்களை நடத்த மாநகராட்சி திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை வேகமாக செய்து வருகிறது.
தடுப்பூசி முகாம் குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த 3,000 ஆயிரம் மலேரியா பணியாளர்கள், 1,400 காய்ச்சல் முகாம் பணியாளர்கள், 1,400 அங்கன்வாடி ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அந்த ஒரு நாளில் மட்டும் அதிகபட்சமாக 3½ லட்சம் பேருக்கு போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி போடாத 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் அன்றைய நாளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் நகரம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இதற்காக சிறப்பு பிரசார பாடல் ஒன்றும் தயார் செய்யப்பட்டுள்ளது. ‘தடுப்பூசி போடு மக்கா’ என்ற பாடல் மூலம் வீதி வீதியாக போட வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.