“மருத்துவரீதியிலான கருக்கலைப்பு சட்டம் 2021” வரும் 24ம் தேதி முதல் அமலாக்கப்படுவதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.
மருத்துவ ரீதியிலான கருகலைப்பு சட்டம் 1971ன் படி ஒரு பெண்ணுக்கு மருத்துவரீதியன காரணங்கள், உயிருக்கு ஆபத்தான சூழல், கருவில் இருக்கும் குழந்தை குறைபாடுகளுடன் இருந்தாலோ அல்லது பாலியல் வன்கொடுமை போன்றவற்றால் ஏற்பட்ட கர்ப்பமாக இருந்தாலோ 20 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்யலாம் என கூறுகிறது. இதை பதிவுபெற்ற மருத்துவர் மட்டுமே கருக்கலைப்பு செய்யலாம் எனவும், அந்த கரு 12 வாரங்களுக்குள் இருந்தால் ஒரு மருத்துவரே முடிவு செய்து கருக்கலைப்பு செய்யலாம். அதற்கு மேலான கால கட்டத்தில் இருந்தால் இரண்டு மருத்துவர்கள் சேர்ந்தே கருவை கலைப்பது தொடர்பாக முடிவு செய்ய முடியும்.
இந்நிலையில், மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு செய்வதற்கான உச்சவரம்பை 24 வாரங்களாக உயர்த்தியும், 20 வாரங்கள் வரையிலான கருவை கலைக்க ஒரு மருத்துவரின் ஆலோசனையே போதுமானது என்றும், 20 முதல் 24 வாரங்களுக்கு இரண்டு மருத்துவர்கள் சேர்ந்தே கருக்கலைப்பு தொடர்பாக முடிவு செய்ய முடியும் என்ற சட்டத்திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து இந்த மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்று சட்டமாகி அரசிதழில் வெளியிடப்பட்டது,
இந்நிலையில் அந்த சட்டம் வரும் 24ம் தேதி (செப்டம்பர் 24) முதல் அமலுக்கு வருவதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தற்போது அறிப்பாணை வெளியிட்டுள்ளது.




