புதுடெல்லி: டெல்லியில் காற்றின் தரம் வெகுவாக மோசமடைந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தலைநகர் டெல்லியில் வாகன நெரிசல் காரணமாகவும், அண்டை மாநிலங்களில் விவசாயிகள் பயிர் கழிவுகளை எரிப்பதாலும் வரும் புகை டெல்லியில் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவில் அபாய கட்டத்தை எட்டியுள்ளது.
இதற்கிடையில், தீபாவளி பண்டிகை சமயத்தில் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் தடையை மீறி பட்டாசு வெடிக்கப்பட்டது. இதனால் டெல்லியில் காற்றின் தரம் மேலும் மோசமடைந்தது.
இன்றைய நிலவரப்படி டெல்லியில் காற்று தர குறியீடு மோசமான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று காலை டெல்லியின் ஒட்டுமொத்த காற்றின் தர குறியீடு 499 ஆக இருந்ததாக காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், பொதுமக்களுக்கு சுவாசம் தொடர்பான கோளாறுகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்னும் ஒரு வாரம் வரை டெல்லியில் இந்த மோசமான நிலை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.