முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை வேண்டுமென்றே அப்பல்லோ மருத்துவமனை தரப்பு தான் தாமதப்படுத்துகிறது என்று ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தில் பல்வேறு தரப்பினரும் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைத்த நிலையில் முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தற்போது வரையில் எந்த விசாரணைக்கும் ஆஜராகவில்லை.
அதே சமயத்தில் இந்த ஆணையத்திற்கு எதிராக அப்பல்லோ மருத்துவமனை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனை தாக்கல் செய்த மனு நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அப்பல்லோ மருத்துவமனை சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் ஆஜராகி, இந்த மனுக்கள் இன்று (நேற்று) விசாரிக்கப்பட்டால், விசாரணை நிறைவுறாது. அடுத்த வாரத்திற்குத் தள்ளி வைக்கப்படும். அடுத்த வாரத்தில் தனிப்பட்ட சில பணிகள் இருப்பதால் இவ்வழக்கில் தன்னால் ஆஜராக முடியாத நிலை உள்ளது. எனவே தசரா விடுமுறைக்குப் பிறகு வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, இதற்கு ஆட்சேபம் தெரிவித்தார். இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள நிலையில் இந்த மனுக்களை விசாரிக்க சிறிது நேரமே போதுமானது. எனினும் ஏன் இந்த மனுக்கள் விசாரிக்க படாமல் உள்ளன என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. விசாரணையில் வாதங்களை முன்வைக்க முன் தயாரிப்புடன் வரவேண்டுமென்று நீதிமன்றத்தில் வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து ஆறுமுக ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே, இந்த வழக்கில் புதிதாக வாதங்களை முன்வைக்க எதுவும் இல்லை. ஏற்கனவே அனைத்து வாதங்களும் முடிந்துவிட்டது. ஆணையத்தின் விசாரணையும் ஒரு மாதத்தில் முடியும் நிலையில் உள்ளது. இவ்வழக்கில் மருத்துவமனையின் தரப்புதான் வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறது” என்று குற்றம் சாட்டினார்.
அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை அக்டோபர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.