கொரோனா பரவலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள, இந்தியாவுக்கு 3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.22.48 கோடி நிதி வழங்க, ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும், கடுமையாக அச்சுறுத்திவருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் முடங்கியுள்ளதால், கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது கொரோனா தடுப்பு பணிகளுக்காக, இந்தியாவுக்கு மேலும் 3 மில்லியன அமெரிக்க டாலர்கள்வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி தற்போது வழங்கியுள்ளது. இதன் இந்திய மதிப்பு, 22,47,97,500 ரூபாய். ஆசிய பசிபிக் பேரிடர் மேலாண்மை நிதி தொகுப்பில் இருந்து இத்தொகை அளிக்கப்பட உள்ளது. ஜப்பான் அரசு இத்தொகையை பேரிடர் மேலாண்மை நிதிக்கு அளிக்கிறது.
உடல் வெப்ப நிலையை பரிசோதிக்கும் தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்ட மருத்துவ கருவிகள் வாங்குவது, கொரோனா சிகிச்சை உள்ளிட்டவற்றிற்கு இந்த நிதியை இந்தியா பயன்படுத்த உள்ளது. முன்னதாக, இந்தியாவில் கொரோனா தடுப்பு, சிகிச்சை பணிகளுக்கு, கடந்த ஏப்.,28ம் தேதி, ஆசிய வளர்ச்சி வங்கி, 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.1.12 லட்சம் கோடி) அளிக்க ஒப்புதல் அளித்திருந்தது.