கார்த்திகை 1ம் தேதி பிறந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்கள் சரண கோஷத்துடன் மாலை அணிந்து கொண்டனர்.

கார்த்திகை மாதம் பிறப்பையொட்டி ஐயப்ப பக்தர்கள் இன்று முதல் விரதம் துவக்குவது வழக்கம். சபரிமலை ஐயப்பன் கோவில் கார்த்திகை 1ம் தேதி துவங்கி மண்டல பூஜைகள் நடக்கும். தொடர்ந்து தை ஒன்றாம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெறும். தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, ஐயப்பனை சென்று தரிசனம் செய்கின்றனர்.
கார்த்திகை முதல் நாளான இன்று தமிழகத்தில் உள்ள ஐயப்பன் கோவில்களில் குருசாமிகள் முன்னிலையில் மாலை அணிந்து கொள்கின்றனர். இதற்கான துளசி மணி மாலை, கருப்பு வேட்டி, துண்டு உள்ளிட்ட பொருட்கள் விற்பனை நேற்றே சூடு பிடிக்கத் தொடங்கியது. இன்று அதிகாலை முதல், ஐயப்பன் கோவில் அல்லது விநாயகர் கோவில்கள் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவங்க உள்ளனர்.
இதேபோல, இந்தாண்டு கார்த்திகை 1ம் தேதியான இன்று அதிகாலையில் கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர். இவர்கள் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி அருகில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில், பகவதியம்மன் கோவிலுக்கு சென்று துளசிமணி மாலை அணிந்து குருசாமியின் காலை தொட்டு வணங்கி விரதத்தை தொடங்கினர்.
அதேபோல் கார்த்திகை மாதம் தொடங்கியதையடுத்து, குமரி மாவட்டத்தில் அதிகப்படியான வீடுகளில் பெண்கள் தீபமேற்றி ஐயப்பனை வழிபட தொடங்கினர்.
மீண்டும் சபரிமலை சீசன் கொரோனா கட்டுப்பாடுகளை தாண்டியும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.




