மழை மற்றும் வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள சுகாதாரத்துறையினர் தயாராக இருக்க வேண்டும் என, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்த நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதில், அனைத்து 108 ஆம்புலன்சுகளும் அருகில் இருக்கும் காவல் நிலையங்களுடன் தொடர்பில் இருந்து, வெள்ளம் பாதித்த இடங்களில் மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோருக்கு உடனடியாக சிகிச்சை அளித்திட தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து மருத்துவமனைகளிலும் தேவையான அளவு மருந்து இருப்பு உள்ளதா?, மின்சாரம் மற்றும் ஜெனரேட்டர் வசதிகள் உள்ளதா? என்பதையும் சுகாதாரத்துறையினர் உறுதி செய்ய வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் அவசரகால சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் தயார் நிலையில் இருக்குமாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.




