சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு காலை பத்து மணியளவில், இமெயில் ஒன்று வந்தது. அதில் சென்னை விமான நிலையத்தில் குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், சிறிது நேரத்தில் குண்டுகள் வெடித்துச் சிதறும் என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. வேறு எந்த தகவலும் அதில் இல்லை. இதைத் தொடர்ந்து, விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக சென்னை விமான நிலைய பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டம், விமான நிலைய இயக்குனர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் விமான பாதுகாப்பு துறை, மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், விமான நிறுவனங்களின் அதிகாரிகள், சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகள், சென்னை விமான நிலைய போலீஸ் அதிகாரிகள், அதிரடி படையினர் உட்பட பாதுகாப்பு குழு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கூடுதல் கண்காணிப்புகளுடன், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனை செய்யப்ப்ட்டது. விமானங்களில் ஏற்றப்படும் பார்சல்கள், எரிபொருள் நிரப்பும் இடங்கள், விமான நிலையத்தில் வாகனங்கள் நிறுத்தும் பகுதி ஆகிய இடங்களிலும் தீவிர சோதனைகள் நடத்த முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், விமான நிலைய போலீசார் உட்பட அனைவரும் பகல் 1 மணி வரையில் தீவிரமாக சோதனைகள் நடத்தினர். ஆனால் வெடிகுண்டுகள் இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாததால், இது வழக்கமாக வரும் புரளி தான் என்று தெரிய வந்தது. மர்ம இமெயில் மிரட்டல் தகவல், வெளிநாட்டில் இருந்து, போலி ஐடியில் வந்திருப்பது தெரிய வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். வெடிகுண்டு மிரட்டலால் விமான நிலைய நிர்வாகப் பிரிவு சில மணி நேரத்திற்கு பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.




