பொன்னமராவதி அருகே உள்ள தேனிமலை மலை உச்சியில் அமர்ந்து இளைஞர் ஒருவர் சாதி ஒழிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் சிரிப்பலைகளை உருவாக்கியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே தேனிமலை கிராமத்தில் வசித்து வரும் பழனிச்சாமி என்பவரின் மகன் சண்முகம் (வயது 21). இவர் மேலச்சிவபுரியில் கல்லூரியில் எம்.காம் படித்து வரும் பட்டதாரி இளைஞராவார்.
இவர் சுமார் 700 அடி உயரம் கொண்ட தேனிமலை முருகன் கோயில் மலை உச்சியில் கையில் வேலுடன் அமர்ந்து ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
அதில் தமிழகத்தில் ஜாதியை ஒழிக்க வேண்டும், மதுக்கடைகளை மூடவேண்டும், சீமை கருவை தைலமரங்களை அகற்ற வேண்டும், ஆழ்துளை கிணறு அமைப்பதை தடுக்கவேண்டும் நீர்வளத்தை காக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். அவரிடம் ஊர் மக்கள் மற்றும் காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, மலையின் மீது போலீசார் ஏறி வந்தால் கீழே குதித்துவிடுவதாக கூறிய சண்முகத்தை தீயணைப்பு நிலைய அலுவலர் சந்தானம் தலைமையிலான குழுவினர் மூன்று மணிநேரமாக சாமர்த்தியமாக பேசி இளைஞரின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்து கீழே இறங்க செய்தனர்.
பின்னர் அங்கு தயாராக இருந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலமாக மருத்துவமனைக்கு பொன்னமராவதி போலீசார் அழைத்துச் சென்றனர்.