மதுரை மாவட்டத்தில் உள்ள நன்னீர் ஏரிகளில் மீன்பிடிக்கும் உரிமையை தனியாருக்கு தாரை வார்க்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி,
மதுரை மாவட்டத்தில் உள்ள ஏரி குளம் உள்ளிட்டவற்றில் வளரும் நன்னீர் மீன்களைப் பிடிப்பதற்கு என்று பாரம்பரிய மீனவ குடும்பங்களும் சங்கங்களும் இருந்து வருகிறது. மீன் பிடிக்கும் குத்தகை உரிமையை இந்த பாரம்பரிய மீனவ சங்கங்களுக்கு வழங்கி வந்த நிலையில் சில ஆண்டுகளாக தனியாரும் இதில் கலந்து கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இதனை எதிர்த்து மீனவர் சங்கங்கள் சார்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த மனுவில் தனியாரும் ஏல முறைகளில் கலந்து கொள்ளலாம் அதிகமாகக் கேட்கப்படும் ஏல தொகையினை பாரம்பரிய மீனவர் சங்கங்கள் செலுத்தி மீன் பிடிக்கும் உரிமையை ஓராண்டு வரை பெறலாம் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. முன்னதாக ஒரு முறை ஏலம் பெற்றால் 3 ஆண்டுகள் வரை மீன் பிடிக்கும் உரிமை இருந்து வந்ததை ஓராண்டாக குறைத்ததை எதிர்த்தும் தனியாரும் ஏலத்தில் கலந்து கொள்ளும் பட்சதில் தங்களுக்கு மீன் பிடிக்கும் உரிமை கிடைப்பதில் பெரும் சிக்கல் உருவாகும் என்றும் மேலும் தனியார் அமைப்புகள் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் முறைகளை மாற்றி புதிய விஷயங்களை கையாளும் பட்சத்தில் அது ஒட்டுமொத்தமாக சூழியல் பாதிப்பையும் ஏற்படுத்தி விடும் இது என கோரி மதுரை பாரம்பரிய மீனவர் சங்கங்கள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.