வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாமக்கல், கரூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, தேனி, தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டங்கள், காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு மணி நேரம் வரை மழை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மற்றும் நாளை (நவம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில்) கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு, மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு எச்சரிக்கை தரப்பட்டுள்ளது. நவம்பர் 5 மற்றும் 6 தேதிகளில் மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் அன்றைய தினம் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.