கமல்ஹாசன் படங்களைப் பார்த்தால் குடும்பம் கெட்டுவிடும் என விமர்சித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அதிமுக அரசை கடுமையாக விமர்சித்து பேட்டியளித்து வருகிறார். எம்.ஜி.ஆரின் வாரிசு தான் எனவும் பேட்டியளிக்கிறார். இந்த நிலையில் அரசு அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி பணம், நகையை கைப்பற்றியது குறித்து கமல்ஹாசன் கருத்து தெரிவித்தார்.
அதாவது, லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்குப் போன ஓர் இடத்திலும் தோல்வியோடு திரும்பவில்லை. பெரும்பாலான அதிகாரிகள் திருடித்தான் வைத்திருந்திருக்கிறார்கள். ரொக்கம், தங்கம், வைரம் என்று திருட்டில் செழிப்போ செழிப்பு. அரசு எவ்வழி, அதிகாரிகள் அவ்வழி என விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் அரியலூரில் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக இன்று ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் இதற்கு பதிலளித்தார்.
நடிப்பிலிருந்து ரிட்டையர் ஆன பிறகு தற்போது கட்சி துவங்கியுள்ளார் கமல்ஹாசன். 70 வயதில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்துகிறவர்கள் எல்லாம் அரசியல் செய்தால் என்ன ஆகும். பிக்பாஸ் பார்த்தால் ஊரிலிருக்கும் ஒரு குடும்பம் கூட நன்றாக இருக்காது என்று கடுமையாக குற்றம்சாட்டினார்.
read more: திமுக கூட்டணியின் போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு!
கமல்ஹாசன் நாட்டு மக்களுக்கு நன்மையெல்லாம் செய்யவில்லை. நன்றாக இருக்கும் குடும்பத்தை கெடுப்பதுதான் அவரின் வேலை என்றார். மேலும்,எம்.ஜி.ஆர் நாட்டு மக்களுக்கு பயன்படும்படி எவ்வளவு பாடல்கள் பாடியிருக்கிறார். ஆனால், கமல்ஹாசன் நாட்டு மக்களுக்கு ஆக்கப்பூர்வமான ஒரு பாடலையாவது பாடியிருக்கிறாரா?அவருடைய படத்தைப் பார்த்தால் குடும்பம் காலி. ஆகவே, அவருடைய கருத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை” என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.