கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், ஆம்புலன்ஸ்-ல் அமர்ந்து தேர்வு எழுதிய சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. மாணவருக்கு படிப்பின் மீதுள்ள ஆர்வத்தைக் கண்டு, பலரும் பாராட்டி வருகின்றனர்.
கேரள மாநிலத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆன்லைனில் நடத்தப்படும் வகுப்புகளுக்கு, அந்தந்த மையங்களில் தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருநாக்கரா பகுதியில் உள்ள கல்லூரியில் டிப்ளமோ படித்து வரும், கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், கொரோனா தொற்று பாதிப்பிற்கு உள்ளானார்.
இறுதி தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில், தேர்வுக்கு தயாராகி வந்த மாணவருக்கு கொரோனா தொற்று ஏற்படவே, மாணவர் கொரோனா சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டார். எனவே, மாணவர் தேர்வு மையத்திற்கு சென்று தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால், நான் கண்டிப்பாக தேர்வு எழுத வேண்டும் என மாணவர் விருப்பம் தெரிவித்தார். இதனையடுத்து, அவரை ஆம்புலன்ஸ்-ல் வைத்து தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, மாணவர் சிறப்பு பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட ஆம்புலன்ஸ்-ல் தேர்வு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்பு மாணவருடன் வந்த சுகாதரத்துறையினரிடம், தேர்வுக்கான வினாத்தாளை தேர்வு கண்காணிப்பாளர்கள் வழங்கினார்.
பின்பு சுகாதரத்துறையினர், வினாத்தாளை மாணவரிடம் வழங்கினர். தேர்வு நேரமான 11 மணி முதல் 1 மணி வரை, மாணவர் ஆம்புலன்ஸ்க்குள் அமர்ந்து தேர்வு எழுதினார்.
பின்னர், அவர் எழுதிய விடைத்தாள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, தேர்வு கண்காணிப்பாளரிடம் வழங்கப்பட்டது. தேர்வு முடிந்ததும் மாணவர் அங்கிருந்து மீண்டும் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்ல் அழைத்துச் செல்லப்பட்டார்.
இதைக்குறித்து கேள்விப்பட்ட அனைவரும், மாணவரின் பொறுப்புணர்ச்சியையும், படிப்பின் மீது உள்ள ஆர்வத்தையும் கண்டு மாணவருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.