கொரோனா என்னும் கொடிய நோயை கண்டறிய தற்போது 2 விதமான பரிசோதனைகள் வழக்கத்தில் உள்ளன.
1.ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை. 2. ஆன்டிஜன் கோவிட்-19 பரிசோதனை. இந்த பரிசோதனைகளுக்கு மாதிரிகளை சேகரிப்பது சற்றே கடினம் மற்றும் வலியானது. அதே போல் செலவும் கொஞ்சம் அதிக மாகிறது. முதல் பரிசோதனையில் முடிவு வர பல மணி நேரம் ஆகும். 2-வது பரிசோதனையில் முடிவு வர சில நிமிடங்கலே எடுத்துக்கொள்ளும். ஆனால் பெருமளவு சோதனை செய்ய கருவிகள் கிடைப்பதில் சிரமம் உள்ளது.
இந்த சூழலில்தான் கொரோனாவை நவீன முறையில் அதாவது சாதாரணமாக உமிழ்நீரைக் கொண்டே கண்டறியும் ‘சலிவா டைரக்ட்’ என்ற பரிசோதனை என்ற முறையை அமெரிக்காவில் யேல் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி விஞ்ஞானிகள் உருவாக்கி அசத்தி இருக்கிறார்கள்.
இந்த முறையில் அமெரிக்காவில் உள்ள கொரோனா பரிசோதனை செய்வதற்கு எப்.டி.ஏ. என்று சொல்லப்படுகிற அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனது அனுமதியை அளித்துள்ளது.
இந்த பரிசோதனை எளிமையானது, மலிவானது என்பதால் இந்திய விஞ்ஞானிகளின் பார்வையும் இந்த பரிசோதனையின் மீது திரும்பி உள்ளது.
தற்போதைய 2 பரிசோதனை முறைகளுக்கும் மாற்றாக இந்த பரிசோதனை முறை அமையும். இதில் பொதுமக்களிடம் இருந்து உமிழ் நீர் மாதிரிகளை சேமிக்க சுகாதார ஊழியர்கள் உயிரைக்கொடுக்க தேவையில்லை. அவர்கள் ஆபத்தோடு கைகுலுக்கவும் அவசியமில்லை. சோதனைக்கு உட்படுத்தப்படுகிற நபர், வெறுமனே ஒரு சோதனைக்குழாயில் உமிழ்நீரை மட்டும் துப்பினால் போதும். அதை எடுத்து பாதிக்கப்போடு மூடி பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பி விடலாம்.
எனவே இந்த சலிவா பரிசோதனை குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விரைவில் பரிசீலித்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தால் பெருந்திரளான மக்களுக்கு எளிதான வகையில் கொரோனா பரிசோதனை செய்ய வழி பிறக்கும். இதனால் கொரோனாவை பரவ விடாமல் விரட்டியடிப்பதுவும் சுலபமாக இருக்கும் என அனைவரும் விரும்புகின்றனர்.