இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவும் வேகம் குறைந்தாலும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் நோய்த்தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பாக மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மருத்துவ அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, புதியதாக, 57,982 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,47,664 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 941 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழக்க, பலியானவர்களின் எண்ணிக்கை 50,923 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, தேசிய அளவில் சிகிச்சைக்கு பிறகு நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19,19,843 ஆக அதிகரிக்க , மொத்த பாதிப்பில் இருந்து 71.91% பேர் குணமடைந்துள்ளனர்.

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் குறைந்த வேகத்திலேயே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. அமெரிக்காவில் 23 நாட்களிலும், பிரேசிலில் 95 நாட்களிலும், மெக்சிகோவில் 141 நாட்களிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடக்க, இந்தியாவில் முதல் உயிரிழப்பு ஏற்பட்ட 156 நாட்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை இந்தியாவில் 3 கோடிக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே, கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு உலக அளவில் சுமார் 2 லட்சத்து 94 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 17 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது




