தென்னாப்பிரிக்க நாட்டில் முதன் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் என அறியப்படும் ‘ஒமிக்ரான்’ வகை திரிபு வேகமாக பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு இந்த திரிபு மிகவும் கவலை அளிக்கக் கூடியதாக இருப்பதாக கருத்து தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் மத்திய அரசு அந்தந்த மாநிலங்கள் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியது.
அதையடுத்து தமிழ்நாடு அரசு இந்த புதிய வகை கொரோனா திரிபுவான ஒமிக்ரான் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி பின்வரும் நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமிக்ரான் திரிபு பரவல் இருக்கலாம் என்பதால் அங்கிருந்து தமிழ்நாடு வரும் பயணிகள் கூடுதல் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. High risk நாடுகள் அதாவது கொரோனா திரிபு பரவலுக்கு இலக்கான நாடுகள் என்றும் இந்த நாடுகளை வரையறுத்துள்ளது பொது சுகாதாரத்துறை.
அந்த நாடுகளின் பட்டியல் பின்வருமாறு:
பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகள்,
தென்னாப்பிரிக்கா, பிரேசில்,
வங்கதேசம்,
போஸ்ட்வானா,
சீனா,
மொரீஷியஸ்,
நியூசிலாந்து,
ஜிம்பாப்வே,
சிங்கப்பூர்,
ஹாங்காங்,
இஸ்ரேல் ஆகிய நாடுகள் இதில் அடங்கியுள்ளன.
இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன :
RT-PCR நெகடிவ் சான்றிதழுடன் தான் விமானத்தில் வந்திருக்க வேண்டும்.
RT-PCR நெகடிவ் சான்றிதழ் பயணிகள் உடன் இருந்தாலும் வந்திறங்கிய உடன் மீண்டும் பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்படும்.
தொற்று இல்லை எனில் 7 நாட்கள் வீட்டுத் தனிமைப்படுத்தல். எட்டாம் நாள் மீண்டும் பரிசோதனை. அதிலும் நெகட்டிவ் வந்தால் தனிமைப்படுத்தல் முடித்துக் கொள்ளப்படும்.
பாசிட்டிவ் வந்தால் உடனடியாக அவரது மாதிரி மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். தனி வார்டில் தனிமைப்படுத்தல். மருத்துவ கண்காணிப்பு மற்றும் சிகிச்சை வழங்கப்படும்.
ஒமிக்ரான் இல்லை என மரபணு சோதனையில் கண்டறியப்பட்டால் டிஸ்சார்ஜ். இல்லையெனில் தொடர் சிகிச்சை. தொற்று நெகட்டிவ் என வந்தால் மட்டுமே பயணிகள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவர்.
மேலும் இந்த தடுப்பு நடவடிக்கைகளை முன்னின்று கவனிக்க தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்கள் நான்கிலும் தலா ஒரு சுகாதார திட்ட அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தொடர்பு எண்கள் மருத்துவத்துறையால் வழங்கப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு/சென்னை – மருத்துவர் பெருமாள் (9444045529)
திருச்சி – மருத்துவர் ஸ்ரீராம் (8860250217)
கோவை – மருத்துவர் விஜயகுமார் (8762627911)
மதுரை – மருத்துவர் அருண் சுந்தரேசன் (9842125593)




