கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் கிட்டூர் தாலுக்காவில் உள்ள எம்.கே.ஹூப்பளி என்ற கிராமத்தில் நேற்று காலை 70 வயது முதியவர் உயிரிழந்தார்.
அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்று குடும்ப உறுப்பினர்களும் உறவினர்களும் அஞ்சியிருந்த நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் உயிரிழந்ததை அடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய ஆம்புலன்ஸ் வழங்கக்கோரியும் இறந்தவரின் உடலிலிருந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் குடும்ப உறுப்பினர்கள் சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.
மாலை 3 மணி வரை உடல் அடக்கம் செய்ய ஆம்புலன்ஸ் வாகனம் வழங்காத நிலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவிலிருந்த மயானத்திற்கு உறவினர்கள் உடலை சைக்கிளில் எடுத்து சென்று அடக்கம் செய்தனர்.இறந்தவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா இல்லையா என்று பரிசோதிக்காமல் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
அனைத்து ஊர்களிலும் போதுமான அளவு ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது என கர்நாடக முதல்வர் தெரிவித்திருந்தாலும் பல இடங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸ் வாகனம் கிடைக்காமலும் இறந்தவர்கள் உடல் அடக்கம் செய்ய ஆம்புலன்ஸ் வாகனம் கிடைக்காமலும் கர்நாடகாவில் அவல நிலை தொடர்ந்து வருகிறது. இதற்கு கர்நாடக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.